credit ns7.tv
குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல்நலத்திற்கு கேடு என்று பாட்டில்களிலேயே எழுதியிருந்தாலும்கூட, அதைப் படித்துகொண்டே குடிப்பவர்கள் இன்றும் திருந்திய பாடில்லை. அப்படி திருந்தாதவர்களுக்கு மேலும் அதிர்ச்சியை அள்ளிக் கொட்டியிருக்கிறது ஓர் ஆய்வறிக்கை.
சமூகத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் குடிப்பழக்கம் தொடர்பாக சமூக ஆய்வு அமைச்சகத்தின் கீழ் இந்திய மருத்துவர்கள் மற்றும் பொது சுகாதார ஆராய்ச்சியாளர்கள் ஓர் ஆய்வை மேற்கொண்டனர். அதில், வரும் 2050 ம் ஆண்டுக்குள் குடிப்பழக்கத்தால் 26 கோடி பேர் உயிரிழப்பார்கள் என்ற விபரம் தெரியவந்துள்ளது. அது மட்டுமல்லாமல் 2050ம் ஆண்டுக்குள் ஒரு தனி மனிதனுடைய சராசரி வாழ்நாளில் ஆண்டுக்கு 75 நாட்கள் குறையும் என்றும் கூறியிருக்கிறது.
குடியால், தனி மனித இழப்புகள் ஏற்படும் அதே வேளையில், அரசுக்கு வருவாய் வந்துகொண்டிருக்கிறது என்று தான் இவ்வளவு காலம் நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால், குடி, வீட்டுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் கேடு என்பதை நிரூபிக்கும் வகையில், மதுப்பழக்கத்தால் 2050ம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 1.5 சதவீதம் நாட்டிற்கு கிட்டத்தட்ட 98 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளது இந்த ஆய்வு. இதனால், பொருளாதார ரீதியாக இந்தியா பல சிக்கல்களை சந்திக்க நேரிடலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
எந்த வயதினர் மதுவால் பாதிப்பு?
கல்லீரல் பாதிப்புகள் - 47 வயதுக்குட்பட்டவர்கள்
புற்றுநோய் பாதிப்புகள் - 54 வயதுக்குட்பட்டவர்கள்
சாவை விபத்துகள் - 42 வயதுக்குட்பட்டவர்கள்
புற்றுநோய் பாதிப்புகள் - 54 வயதுக்குட்பட்டவர்கள்
சாவை விபத்துகள் - 42 வயதுக்குட்பட்டவர்கள்
மேலும் இந்த ஆய்வில் மது குடிப்பதால் 47 வயதுக்குட்பட்டவர்கள் கல்லீரல் பாதிப்புகளாலும், 54 வயதுக்குட்பட்டவர்கள் தலை மற்றும் கழுத்தில் ஏற்படும் புற்றுநோயாலும் உயிரிழக்கின்றனர். மேலும் 42 வயதுக்குட்பட்டவர்கள் குடித்துவிட்டு ஏற்படுத்தும் சாலை விபத்துகளாலும் உயிரிழப்புகள் ஏற்படுவதாக இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்திய ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள், சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் அறிக்கைகள் போன்ற பல்வேறு வகையான அரசாங்க தரவுகளை ஆதாரங்களாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மது அருந்துவதால் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்க்காக ஆண்டொண்றுக்கு 3 ஆயிரத்து 127 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு சுமை ஏற்படும் என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இத்தனை நாட்களாக மதுவால் குடும்பம் சீர்குலையும் என்று நினைத்திருந்தது, தற்போது நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக மாறியிருப்பது அரசாங்கத்திற்கு தலைவலியாக இருக்ககூடும்
2018 ம் ஆண்டின் ஓர் புள்ளிவிவரத்தின் படி மதுவால், ஆண்டொன்றிற்கு சுமார் 2லட்சத்து 60ஆயிரம் இந்தியர்கள் உயிரிழக்கின்றனர். இதனை வைத்துப்பார்க்கும்போது, இந்த ஆய்வின் முடிவுகள் 2050 ம் ஆண்டுக்குள் நடந்துவிடும் என்றே தோன்றுகிறது. இதனைத்தடுக்க தீர்வாக மது ஒழிப்பு என்பதைத்தாண்டி விழிப்புணர்வை ஏற்படுத்துவது, விற்பனையை ஒழுங்குபடுத்துவது மற்றும் மதுத் தடுப்பு உத்திகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்றே ஆலோசனை வழங்கியிருக்கிறது இந்த ஆராய்ச்சிக்குழு
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் மதுவால் அதிகளவு வருவாய் கிடைப்பதால் பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், இன்னும் 40 ஆண்டுகளில் மதுவால் நாட்டின் சமூக மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படும் இந்த இழப்புகளை எப்படி ஈடுகட்டப் போகிறது அரசு என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..