கீழடி அகழாய்வில் 4வது பழங்கால உறைக்கிணறு கண்டெடுக்கப்பட்டதால், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் தண்ணீரை பாதுகாப்பாக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு தொடங்கியுள்ளது. முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு ஆகியோரது நிலத்தில் இந்த அகழாய்வு நடந்து வருகிறது. கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கப்பட்ட அகழாய்வில் சுவர், வட்டப்பானை உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது உறைகிணறு, தண்ணீர் குடிக்க பயன்படுத்தப்படும் ஜக்-மூடி உள்ளிட்டவைகள் கிடைத்துள்ளன.
உறைகிணறுகள் கண்டறியப்பட்டுள்ளதால் இப்பகுதியில் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் குடியிருப்புகள் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உறைகிணறுகள் அனைத்தும் 5 முதல் 7 அடி உயரம் வரையே இருப்பதால் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தண்ணீர் 5 அடியிலேயே கிடைத்திருக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் உறைகிணறுகளை தொழில்நுட்ப ரீதியில் அமைக்கப்பட்டு அதனை தமிழர்கள் பாதுகாப்பாக பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நடந்த நான்கு கட்ட அகழாய்வில் மூன்று கிணறுகள் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது நான்காவதாக உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் குடியிருப்புகள் இருந்ததற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
credit ns7.tv