திரைத்துறையைச் சேர்ந்த 49 பேர் சார்பாக பிரதமருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இயக்குநர் மணிரத்னம் கையொப்பம் இடவில்லை என்று மணிரத்னம் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. ஆனால், கையெழுத்திட்டது உண்மைதான் என்று சுஹாசினி மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 24ம் தேதி ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல சொல்லி இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் தாக்கப்படுவது குறித்து, இயக்குநர் அபர்ணா சென், அனுராக் காஷ்யப், ராமச்சந்திர குகா உள்ளிட்ட 49 பிரபலங்கள் கையெழுத்திட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர். அந்த கடிதத்தில், “துரதிர்ஷ்டவசமாக “ஜெய் ஸ்ரீராம்”என்ற போர் முழக்கம் ஆத்திர மூட்டும் வகையிலும், சட்டம் மற்றும் ஒழுங்கை குழைக்கும் வகையிலுமான பிரச்சனையாகி வருகிறது. இதன் பெயரில் பலர் கும்பல் தாக்குதல்கள் நடைபெறுகிறது. மதத்தின் பெயரால் இதுபோன்ற வன்முறைகள் நடப்பது அதிர்ச்சியளிக்கிறது. ராம் என்ற பெயர் தற்போது இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மையான இனத்திற்கு அச்சமூட்டும் வகையிலானதாக இருக்கிறது. இந்நாட்டின் உயரிய பொறுப்பில் இருக்கும் நீங்கள், ராமரின் பெயரில் நடக்கும் இதுபோன்ற வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று எழுதியிருந்தனர்.
அந்த 49 பிரபலங்களின் பெயரில் இயக்குநர் மணிரத்னத்தின் பெயரும், அவரது கையொப்பமும் இடம்பெற்றிருந்தது. அந்த கடிதத்தில் இடம்பெற்ற கையெழுத்து மணிரத்னத்தினுடையது அல்ல என்று மணிரத்னம் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. அவர்கள் இதுபோன்ற கடிதம் எதையும் பெறவில்லை என்றும், அதில் மணிரத்னம் கையெழுத்தும் இடவில்லையென்றும் தெரிவித்துள்ளனர். அதோடு, மணிரத்னம் அவரது வரவிருக்கும் படத்தின் புரோமஷன் வேலைகளில் இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விளக்கும் ட்வீட் ஒன்றுக்கு பதில் தெரிவித்துள்ள சுஹாசினி மணிரத்னம் “தயவுசெய்து மணிரத்னம் சார்பாக பேசவோ, எழுதவோ செய்யாதீர்கள். தவறான விளக்கங்கள் மீது தள்ளியே இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், KVS Haridas என்பவர் மணிரத்னம் கையெழுத்திட்டிருப்பதாக சொல்வது பொய்யானது என்று தெரிவித்துள்ளார் என்று ஒருவர் தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த சுஹாசினி அவர் தவறாக சொல்வதாக தெரிவித்துள்ளார்.
மேலும், KVS Haridas-இடம், அந்த ட்வீட்டை நீக்குமாறு சுஹாசினி வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து அந்த ட்வீட் நீக்கப்பட்டது.
சுஹாசினி அளித்துள்ள பதில் மூலம் மணிரத்னம் அந்த கடிதத்தில் கையெழுத்திட்டிருப்பது உண்மை என்பது தெரியவந்துள்ளது.
பிரதமருக்கு 49 பேர் எழுதிய கடிதத்திற்கு பதிலடியாக “தேர்ந்தெடுக்கப்பட்ட சீற்றம் & தவறான விவரிப்புகள்” என்ற பெயரில் கங்கனா ரனாவத், ப்ரஷன் ஜோஷி, சோனல் மன்சிங், மண்டிட் விஷ்வ மோகன் பாத் உள்ளிட்ட 60 பேர் கடிதம் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.