கோவை ரயில் நிலையத்தில் பெண்ணை தகாத வார்த்தையில் திட்டியும் அவர் கொண்டு வந்த பொருட்களையும் எட்டி உதைத்த டிக்கெட் பரிசோதகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாரியம்மாள் என்ற பெண், கோவையில் இருந்து சேலத்திற்கு ரயிலில் சென்றுள்ளார். அப்போது, டிக்கெட் பரிசோதகர் மாரியம்மாளிடம் டிக்கெட் கேட்டுள்ளார். இதற்கு மாரியம்மாள் தனது டிக்கெட் கணவரிடம் உள்ளது என்றும் அவர் முன்னே உள்ள பெட்டியில் உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து டிக்கெட் பரிசோதகர்கள் மாரியம்மாளை ரயிலை விட்டு இறங்கும்படி வற்புறுத்தியதோடு, தகாத வார்த்தையில் பேசி அவர் கொண்டு வந்த பாத்திரங்களை எட்டி உதைத்துள்ளார். இதைக் கண்ட ரயில்வே தலைமை காவலர் வீரமுத்து, பயணிகளிடம் இப்படி நடந்து கொள்ளக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.
அதற்கு டிக்கெட் பரிசோதகர், தனக்கு அறிவுரை கூறுகிறாயா என காவலரிடம் பொது இடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவருக்கு மிரட்டல் விடும் தொனியிலும் பேசினார். இதை பார்த்த சக பயணிகள், டிக்கெட் பரிசோதகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
credit ns7.tv