திங்கள், 29 ஜூலை, 2019

தமிழகத்தில் குறைந்து வரும் பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை..! July 29, 2019

credit ns7.tv
Image
பொறியியல் படிப்புகளுக்கான நான்காம் கட்ட கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில், 16 கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட சேரவில்லை என்பது, தெரியவந்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 479 பொறியியல் கல்லூரிகளில், பி.இ மற்றும் பி.டெக் பொறியியல் பட்ட மேற்படிப்புகளுக்கு, சுமார் 1 லட்சத்து 72 ஆயிரத்து 940 இடங்கள் உள்ளன. இதற்கான கலந்தாய்வு கடந்த 3ம் தேதி துவங்கி நான்கு கட்டங்களாக நடைபெற்றது. இதில், இதுவரை 76 ஆயிரத்து 364 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. மொத்தம் உள்ள 479 கல்லூரிகளில், இதுவரை 13 கல்லூரிகளில் மட்டுமே 100 சதவீத மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. 85 கல்லூரிகளில் 10 சதவீதத்துக்கும் குறைவாகவே மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதிலும் குறிப்பாக, 16 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. இதனால், சுமார் 90 ஆயிரத்து, 737 அரசு ஒதுக்கீடு இடங்கள் காலியாக உள்ளன. இதன்மூலம், பொறியியல் படிப்புகள் மீதான மாணவர்களின் ஆர்வம் குறைந்து வருவது தெரியவருவதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

இதில் அதிகபட்சமாக கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவை 63% மாணவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். அதற்கு அடுத்ததாக எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பாடப்பிரிவை சுமார் 43% மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்,இதை தவிர இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி போன்ற படிப்புகளுக்கு வழக்கம் போல் மாணவர் சேர்க்கை அதிகம் இருந்தாலும், இயந்திரவியல், விமான பொறியியல் பி.இ கட்டுமான பொறியியல், மின்னியல் மின்னணுவியல் உள்ளிட்ட பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை கடந்த சில ஆண்டுகளை விட பெரிதும் சரிந்துள்ளது. துணை கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அதிகபடியான எண்ணிக்கையில் கலந்து கொண்டு கல்லூரிகளை தேர்வு செய்ய வாய்ப்புகள் இல்லை என்பதால் இந்த 54.30% காலி இடங்களில் பெரிய மாற்றம் வர வாய்ப்புகள் இல்லை என தெரிய வருகிறது.
இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் பொறியியல் கல்லூரிகளின் தரம் குறித்து ஆராய்ந்து தர வரிசை பட்டியலை வெளியிடும்,அப்படி பல்வேறு அங்கீகாரத்தை பெற்றுள்ள சில முக்கிய பொறியியல் கல்லூரிகளில் கூட மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது என்றால் பொறியியல் படிப்புகள் மீது மாணவர்களுக்கு உள்ள மோகம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்கின்றனர் கல்வியாளர்கள்.