நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்யும் சந்திரயான்-2 விண்கலத்தை ஏவுவதற்கான ஒத்திகை சோதனைகளும் வெற்றிகரமாக நடந்து முடிந்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ராக்கெட்டை செலுத்துவதற்கான 20 மணி நேர COUNT-DOWN இன்று மாலை 6.43 மணிக்கு தொடங்குகிறது. நிலவினை ஆராயும் சந்திரயான்- 1 திட்டம் கடந்த 2008ம் ஆண்டு அக்டோபரில் மேற்கொள்ளப்பட்ட நிலையில், நிலவில் தண்ணீர் திவலைகள் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக நிலவில் தரையிறங்கி ஆராய்ச்சி செய்வதற்கான சந்திரயான்- 2 திட்டப்பணிகள் நிறைவடைந்துள்ளன. ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து கடந்த 15 ஆம் தேதி அதிகாலை 2:51 மணிக்கு சந்திரயான் விண்கலம் ஏவப்படவிருந்த நிலையில், கிரையோஜெனிக் எஞ்சினில் வாயுக்கசிவு காரணமாக, கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.
கிரையோஜெனிக் எஞ்சின் கோளாறுகள் சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து, நாளை பிற்பகல் 2:43 மணிக்கு விண்கலத்தை விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது. இதற்கான 20 மணி நேர COUNT-DOWN இன்று மாலை 6.43 மணிக்கு தொடங்குகிறது.
சுமார் 3,800 கிலோ எடையுள்ள ORBITER, LANDER மற்றும் ROVER சாதனங்களை, ஜிஎஸ்எல்வி மாக்- 3 ராக்கெட் சுமந்து செல்கிறது. 50 நாள் பயணத்திற்குப் பின், பூமியிலிருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலவில், செப்டம்பர் 6 அல்லது 7 ஆம் தேதி விக்ரம் என்ற Lander சாதனம் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா நாடுகளை தொடர்ந்து, நிலவின் ஆராயும் 4வது நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. LANDER, ROVER சாதனங்களை தர ரஷ்யா மறுத்துவிட்ட நிலையில், உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இஸ்ரோ விஞ்ஞானிகள் அவற்றை உருவாக்கி உள்ளனர்.
இதுவரை எந்த ஒரு நாடு முயற்சிக்காத நிலவின் தென்துருவப் பகுதியை சந்திரயான்-2 விண்கலம் ஆய்வு மேற்கொள்ளவுள்ளது. இதன் மூலம் மனித உலகம் இதுவரை அறிந்திராத நிலவு குறித்த பல அறிவியல் உண்மைகள் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
credit ns7.tv