சனி, 27 ஜூலை, 2019

ப்ளஸ் டூ பாடப் புத்தகத்தில் தமிழின் தொன்மை குறித்த தவறான பகுதி நீக்கப்படும் : அமைச்சர் அறிவிப்பு! July 27, 2019


தமிழை விட சமஸ்கிருதமே தொன்மையானது என தமிழக அரசின் பன்னிரெண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் அச்சிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த தவறுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 12ம் வகுப்புக்கு இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஆங்கில பாடப்புத்தகத்தில் மொழியியல் ஆராய்ச்சியாளர் ஜார்ஜ்.எல்.ஹெர்ட் எழுதிய 'The Status of Tamil as a Classical Language' என்னும் பகுதி இடம் பெற்றுள்ளது. தமிழ் மொழி கி.மு 300 ஆம் ஆண்டுகள் பழைமையானது என்றும், சமஸ்கிருதம் கி.மு 2000ம் ஆண்டுகள் பழமையானது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
News7Tamil
இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து, ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இது தமிழக அரசா அல்லது சமஸ்கிருத சர்க்காரா என கேள்வி எழுப்பியுள்ளார். காவியை பூசிக் கொள்பவர்களின் ஆட்சியில் இது தானே நடக்கும் எனவும் விமர்சித்துள்ள அவர், இந்த கொடுமையை எப்படி சகிப்பது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.  
தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், சமஸ்கிருதத்தை தாங்கி பிடிப்பதன் மூலம் பாஜகவுக்கு பல்லக்கு தூக்குகிற அவலநிலைக்கு அதிமுக அரசு தள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். தமிழ் மொழியை சிறுமைப்படுத்தி, சமஸ்கிருதத்திற்கு தொன்மையான தகுதியை வழங்கியிருக்கிற பகுதியை தமிழக அரசு நீக்காவிட்டால் 12 ஆம் வகுப்பு ஆங்கில புத்தகத்தை தீயிட்டு கொளுத்துவோம் என எச்சரித்துள்ளார். 
இந்த விவகாரத்தில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் டுவிட்டரில் தமது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். 
இதனிடையே, ப்ளஸ் 2 பாடப்புத்தகத்தில் தமிழின் தொன்மை குறித்து தவறாக குறிப்பிடப்பட்டதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ப்ளஸ் 2 பாடப் புத்தகத்தில் திருத்தம் செய்ய அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும் என  தெரிவித்தார். 
12ஆம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில், லத்தீன், கிரேக்கம், ஹீப்ரூ, சைனிஸ் உள்ளிட்ட மொழிகளின் தொன்மை குறித்தும் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை எல்லாவற்றையும் விட, தமிழ் மொழியின் தொன்மை மிகவும் குறைவாக இருப்பதாக அச்சிடப்பட்டிருப்பது தமிழ் ஆர்வலர்களிடையே கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.  

credit ns7.tv