புதன், 31 ஜூலை, 2019

உன்னாவ் விவகாரம் : தலைமை நீதிபதி காட்டம்! July 31, 2019

ns7.tv
Image
உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்‍கப்பட்ட பெண் பாதுகாப்பு கோரி எழுதிய கடிதத்தை, தாமதமாக சமர்ப்பித்தது குறித்து அறிக்கை அளிக்கும்படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 
உன்னாவ் வழக்‍கில், பாதிக்‍கப்பட்ட பெண் மற்றும் அவரது வழக்‍கறிஞர் உள்ளிட்டோருடன் சென்ற கார் மீது, கடந்த சில தினங்களுக்கு முன் லாரி மோதிய விபத்தில் பெண்ணின் தாய், உறவினர் உயிரிழந்தனர்.  பாதிக்கப்பட்டபெண்ணும், வழக்கறிஞரும் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து உன்னாவ் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், கடந்த 2017-ம் ஆண்டு குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார், கட்சியிலிருந்து இடைநீக்‍கம் செய்யப்பட்டுள்ளார். 
இந்நிலையில் பாதிக்‍கப்பட்டபெண், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்‍கு, பாதுகாப்புகோரி கடந்த 12ம் தேதியே கடிதம் எழுதியுள்ளார். அதில் தனது வீட்டிற்கு வந்த கும்பல் ஒன்று, வழக்‍கை வாபஸ் பெற வலியுறுத்தியதாகவும், குடும்பத்தினர் அனைவரையும், சிறையில் அடைத்துவிடுவோம் என மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார். 
இந்த கடிதம் மீது முன்னரே பாதுகாப்பு அளித்திருந்தால் விபத்தை தடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த முக்கிய கடிதத்தை தன்னிடம் தாமதமாக அளித்துள்ளது குறித்து, ஒரு வாரத்திற்குள் உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகம் அறிக்கை அளிக்கும்படியும்  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனிடையே உன்னாவ் சிறுமி மீதான விபத்து குறித்த விசாரணை மேற்கொண்டு வரும் சிபிஐ, பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.