புதன், 24 ஜூலை, 2019

பருவமழை தீவிரமடைந்ததால் வெள்ளக்காடான வடமாநிலங்கள்! July 24, 2019

பொதுமக்களை மீட்கும் பணி!
தென் மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, மகாராஷ்ட்ரா, அஸ்ஸாம், ஹிமாச்சலப் பிரதேசம் என பல மாநிலங்களில் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 
மகாராஷ்ட்ராவின் மும்பை நகரில் நேற்றிரவு கனமழை பெய்தது. இதனால், நகரின் பல பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. தேங்கியுள்ள மழை நீரில் பொதுமக்களும், மாணவர்களும் மிகுந்த சிரமத்திற்கு இடையே செல்ல நேரிட்டது. சாலைகளில் மழைநீர் அதிக அளவில் தேங்கியுள்ளதால், நகரின் பல பகுதிகளிலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.போதிய வெளிச்சம் இல்லாத நிலையில், அந்தேரி பகுதியில் அதிகாலை 3 மணி அளவில், 3 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இதில், 10 பேர் வரை காயம் அடைந்தனர். சியோன் பகுதியில், ரயில் பாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், ரயில்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. 
மழையில் நனைந்து செல்லும் பள்ளி மாணவிகள்!
அஸ்ஸாமில் கடந்த 5 நாட்களாக கன மழை பெய்ததால், மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. போங்காய்கோன் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் ஆயிரத்து 500 பேர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட நிலையில், அவர்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள், பத்திரமாக மீட்கப்பட்டு அரசு அமைத்துள்ள தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு, மருத்துவ முகாம்கள் மூலம் தேவையான மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. 
ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏராளமான ஆப்பிள் மரங்கள் வேரோடு சாய்ந்தன. கிண்ணோர் மாவட்டத்தில், சாலைகள் மட்டுமின்றி மேம்பாலங்களும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 
தாழ்வான பகுதிகளிலும், கார்கலாலா மற்றும் பாஸ்பா ஆறுகளின் கரையோரமும் வசித்து வந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மழை தொடர்ந்து பெய்து வருவதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என கிண்ணோர் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 

கேரளாவின் கன்னூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற மழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் பிறப்பித்துள்ளது. கேரளாவில் கடந்த மாதம் தொடங்கிய தென் மேற்குப் பருவமழை தற்போது அங்கு தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், கன்னூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், அம்மாவட்ட மக்களுக்கு மஞ்சள் நிற மழை எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

credit ns7.tv