வெள்ளி, 26 ஜூலை, 2019

இதயத்துடிப்பு குறைவதை எச்சரித்து ஒருவரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்! July 24, 2019

credit ns7.tv
Image
இதயத்துடிப்பின் வேகம் குறைவதை எச்சரித்ததால் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் சரியான நேரத்தில் சிகிச்சைப் பெற்று உயிர்பிழைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இங்கிலாந்து நாட்டின் எஸ்ஸெக்ஸ் நகரை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு இதழுக்கு, தொழில்நுட்பம் குறித்த கட்டுரைகளை எழுதித்தருபவர் பால் ஹட்டன். இவரது இதயத்துடிப்பு வழக்கத்திற்கு மாறாக மிக குறைவாக இருப்பதாக ஹட்டன் பயன்படுத்தும் ஆப்பிள் வாட்ச் எச்சரித்துக் கொண்டே இருந்துள்ளது. இதயத்துடிப்பானது சாதாரணமாக நிமிடத்திற்கு 60 முதல் 100 வரை இருக்கவேண்டும் என்ற நிலையில் ஹட்டனின் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 40 ஆக குறையத்தொடங்கியது. இதனை உணர்ந்த ஆப்பிள் வாட்ச்சானது ஹட்டனை தொடர்ந்து எச்சரித்தது. இதன் காரணமாக ஹட்டன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில், ஹட்டனுக்கு வெண்ட்ரிகுலர் பைஜெமினி நிலையில் அவரது இதயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையானது சீரற்ற இதயத்துடிப்பு மற்றும் ரத்தத்தை சீராக வெளியேற்ற முடியாமல் இதயத்தை முடக்கும் என்று கூறப்படுகிறது. அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்ததன் பேரில், அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பேசிய ஹட்டன், தற்போது ஆப்பிள் வாட்ச்சில் எனது இதயத்துடிப்பை அடிக்கடி சோதித்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். இப்போது சீராக இருக்கிறது என்றார். ஆப்பிள் வாட்ச்சின் எச்சரிக்கையால் ஒருவர் உயிர்பிழைப்பது இது முதல்முறையல்ல.
கடந்த ஏப்ரல் மாதம் ஒருவரது இதயத்துடிப்பு திடீரென அதிகரிக்க, ஆப்பிள் வாட்ச் அவரை எச்சரித்ததோடு மருத்துவமனைக்கும் தகவல் தெரிவித்தது. உடனடியாக விரைந்துவந்த மருத்துவர்கள் அவரை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்தனர். பின்னர் நடைபெற்ற மருத்துவ சோதனையில் அவருக்கு Tachycardia இருப்பது கண்டறியப்பட்டது. இந்த பிரச்சனை இருப்பவர்களது இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 100 முறைக்கு மேலே போகும். ஆப்பிள் வாட்ச் சரியான நேரத்தில் எச்சரித்ததால் அவரை காப்பாற்ற முடிந்தது.
இதயத்துடிப்பு மட்டும் அல்லாமல் கீழே விழுந்து படுகாயமடைந்தவர்கள் கூட ஆப்பிள் வாட்சின் எச்சரிக்கையால் உயிர்பிழைத்துள்ளனர். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நார்வேயைச் சேர்ந்த 67 வயதான் டோரல்வ் ஆஸ்ட்வாங் என்பவர் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில் சுயநினைவை இழந்தார். அப்போது அவர் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச்-4  உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு தகவல் தெரிவித்ததால், மீட்கப்பட்ட டோரல்வ் உயிர்பிழைத்தார்.
ஆப்பிள் வாட்ச்-4 சீரியஸானது இசிஜி மற்றும் சீரற்ற இதயத்துடிப்பை கண்டறியும் ஆப் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. இந்த இசிஜி ஆப்பானது இதயத்துடிப்பின் அளவை தொடர்ந்து பதிவு செய்துகொண்டே இருக்கும். இதயத்துடிப்பில் ஏதாவது மாற்றம் இருந்தால் அதைக் கண்டறிந்து எச்சரிக்கை செய்யும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்காக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதியை ஆப்பிள் பெற்றிருக்கிறது. இது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு வந்துவிட்டது. ஆனால் இந்தியாவில் இன்னும் விற்பனைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இசிஜி தொழில்நுட்பம் கொண்ட இந்த வாட்சை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவர ஆப்பிள் நிறுவனம் கடுமையாக முயற்சி செய்துவருவதாக அந்த நிறுவனத்தின் ஹெல்த் வைஸ் ப்ரெசிடெண்ட்டான டாக்டர் சம்பல் தேசாய் தெரிவித்துள்ளார்.