நெல்லையில் திமுக முன்னாள் மேயர் மற்றும் அவரது கணவர் உட்பட மூவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாநகராட்சியின் முதல் மேயராக கடந்த 1996ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர் உமா மகேஸ்வரி. இவருடைய கணவர் முருகசங்கரன் நெடுஞ்சாலைத் துறையில் பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியில் தனது கணவருடன் உமாமகேஸ்வரி வசித்து வந்தார்.
இந்நிலையில், அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன் மற்றும் வீட்டுப் பணிப்பெண் உள்ளிட்ட மூன்று பேரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது. தகவலறிந்து வந்த போலீசார் மூன்று பேரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நெல்லை மாநகர ஆணையர் பாஸ்கரன், துணை ஆணையர் சரவணன் ஆகியோர் கொலை நடந்த இடத்தில் நேரில் விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட முன்னாள் மேயர் உமா மகேஸ்வரியின் உறவினர்கள் மீது நெல்லையில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே இந்த கொலைகள் சொத்து பிரச்னையா காரணமாக நடந்ததா? அல்லது அரசியல் மோதல் தொடர்பாக கொலைகள் நடந்ததா என்ற கோணத்தில் போலீசார், மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
credit ns7.tv