credit ns7.tv
ராமர் பிறந்த இடமான அயோத்தியில், உலகின் மிக உயரமான ராமர் சிலை (251 மீட்டர்) கட்டப்படும் என உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் மிக உயரிய சிலையான சர்தார் வல்லபாய் படேல் சிலை, குஜராத்தில் திறக்கப்பட்டது. தற்போது சுற்றுலாத்தளமாக மாறியுள்ள அந்த இடத்திற்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இது ஒருபுறம் இருக்க, உலகின் மிக உயரிய சிவன் சிலை, ராஜஸ்தான் மாநிலத்தில் கட்டப்பட்டுவருகிறது என சமீபத்தில் தகவல் வெளியானது.
இதனை அடுத்து, பெரிய சிலைகள் கட்டுவதற்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது என சமூகவலைதளவாசிகள் பலர் விமர்சனம் செய்யத்தொடங்கினர். இந்நிலையில், உலகின் மிக உயரமான ராமர் சிலை, அயோத்தியில் கட்டப்படும் எனவும், அந்த சிலை சர்தார் வல்லபாய் படேல் சிலையை (183 மீட்டர்) விட மிக 68 மீட்டர் உயரமானதாக இருக்கும் எனவும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
சரயு நதிக்கருகில் 100 ஹெக்டேர் நிலம் இந்த சிலை கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் இந்த சிலையின் கட்டுமானப்பணி விரைவில் தொடங்க உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், ராமர் வரலாறு தொடர்பான புத்தகங்கள் அடங்கிய நூலகம், உணவகம், வாகன நிறுத்துமிடம் போன்றவை அந்த சிலை உருவாகப்போகும் இடத்தில் அமைக்கப்பட இருக்கிறது எனவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே, அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என பாஜக அரசு வாக்குறுதி அளித்துவருவது குறிப்பிடத்தக்கது.