வெள்ளி, 19 ஜூலை, 2019

Instagram-ல் முக்கிய பாதுகாப்பு குளறுபடியை கண்டறிந்த சென்னை இளைஞர்! July 19, 2019

Image
ஃபேஸ்புக் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் இன்ஸ்டாகிராமில் பாதுகாப்பு குளறுபடியை கண்டறிந்த தமிழக பாதுகாப்பு வல்லுனருக்கு 30,000 அமெரிக்க டாலர்களை பரிசளித்து ஃபேஸ்புக் கவுரவித்துள்ளது.
புகைப்படங்களை பதிவேற்றும் இன்ஸ்டாகிராம் அப்ளிகேஷனானது மிகவும் பிரபலமாக விளங்கி வருகிறது. இதில் உள்ள முக்கியமான பாதுகாப்பு குறைபாட்டை சென்னையை சேர்ந்த பாதுகாப்பு வல்லுனரான லக்‌ஷ்மன் முத்தையா என்ற இளைஞர் கண்டறிந்துள்ளார். எந்தவித அனுமதியும் இன்றி எந்த இன்ஸ்டாகிராம் கணக்கையும் முத்தையாவால் ஹேக் செய்ய முடிந்தது. பாஸ்வோர்ட் ரீசெட்டினை தூண்டுவதன் வாயிலாக ரெகவரி கோடினை பெறுவதன் மூலம் யாருடைய கணக்கினையும் முத்தையாவால் பயன்படுத்திட முடிந்தது.
உடனடியாக இது தொடர்பாக ஃபேஸ்புக்கின் பாதுகாப்பு அமைப்பிற்கு தெரியப்படுத்தினார். இருப்பினும் முத்தையாவின் அறிக்கையில் தெளிவான தகவல்கள் இடம்பெறாததால் கூடுதல் தகவல்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களை இமெயிலில் அனுப்பிய பின்னர் பாதுகாப்பு குறைபாடினை அறிந்து கொண்டனர்.
முத்தையா கண்டறிந்த குறைபாடு தற்போது சரிசெய்யப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக்கின் சைபர் பாதுகாப்பு பிரிவு மூத்த வல்லுனர் பால் டக்ளின் தெரிவித்தார், பயனாளர்கள் தங்களது கணக்குகளை நிர்வகிப்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக முத்தையா ஃபேஸ்புக்கில் தரவுகள் அழிந்துபோவது மற்றும் வெளிப்படுத்துதல் ஆகியவற்றில் இருந்த குறைபாடுகளை கண்டறிந்து வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது
credit ns7.tv