மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஒரு மாதத்திற்குள் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில், பள்ளி வாகனத்தில் சென்ற மாணவியை, வாகன ஓட்டுநரும், அவரது உதவியாளரும் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி மற்றும் சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவிடக்கோரி கோபிகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். இதுகுறித்து விளக்கமளிக்குமாறு பள்ளிக் கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அனைத்து தனியார் பள்ளி வாகனங்களிலும் கண்காணிப்பு கேமராக்களும் ஜிபிஎஸ் கருவி பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஒரு மாதத்தில் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் நடைமுறையை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்
credit ns7.tv