நடைபெற இருக்கும் வேலூர் தொகுதி தேர்தல் களம் தற்போது உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. இந்த தேர்தலில் எதை வைத்து பிரச்சாராம் செய்யப்போகிறார்,எந்த விவகாரம் வேலூர் தேர்தலில் பேசு பொருளாக இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.எந்த அலையும் வீசாத வேலூரில் ஸ்டாலின் எதை முன்னிறுத்த போகிறார், எதை வைத்து பிரச்சாரம் செய்யப்போகிறார் என்ற சந்தேகத்தை தொடர்ச்சியாக எழுப்புகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
இந்த இடத்தில் தான் முத்தலாக் விவகாரத்தில் அதிமுகவின் ஒற்றை எம்.பி யான ரவீந்திரநாத்குமார் மசோதாவை ஆதரித்து வாக்களித்திருப்பது மிக பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.வெற்றியை தீர்மானிக்கும் கணிசமான இஸ்லாமிய வாக்குகள் நிறைந்துள்ள வேலூர் தொகுதி தேர்தலுக்கு இன்னும் ஏழு நாட்களே உள்ள நிலையில், ரவீந்திரநாத்தின் இந்த ஆதரவு நிலைப்பாடு பல சந்தேகங்களுக்கு வழிவகுக்கிறது.
ரவீந்திரநாத்தின் ஆதரவு நிலைப்பாடு கட்சி தலைமையின் உத்தரவா? அல்லது அவரின் தனிப்பட்ட முடிவா? என்பதும் விவாதிக்கவேண்டியுள்ளது. அதிமுகவின் இந்த நிலைப்பாட்டை இது இரட்டை தலைமையின் இரட்டை நிலைப்பாடு என கடுமையாக விமர்சிக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.ஸ்டாலினின் கருத்துக்கு வலுசேர்த்துள்ள அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ,ரவீந்திரநாத்தின் ஆதரவு கட்சியின் நிலைப்பாடுதான், கட்சி தலைமையின் உத்தரவு படியே அவர் செயல்படுகிறார் என போட்டுடைத்திருக்கிறார். ஆனால் அமைச்சர் ஜெயகுமாரோ மக்களவையை விடுங்கள், மாநிலங்களவையில் எங்கள் கொள்கைகளை தெளிவுபடுத்துவோம், முத்தலாக்கை ஜெயலலிதா எதிர்த்ததுபோல நாங்களும் எதிர்ப்போம் என கூறுகிறார்.
உண்மையில் முத்தலாக் விவகாரத்தில் அதிமுகவின் உண்மை நிலைப்பாடுதான் என்ன?முத்தலாக் விவகாரத்தில் ரவீந்திரநாத் குமார் ஆதரித்து வாக்களித்தது கட்சிக்குள் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விட்டதா? என்ற சந்தேகமும் , முத்தலாக் விவகாரம் வேலூர் தேர்தலில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை வேலூர் தேர்தலோடு முத்தலாக் விவகாரத்தை முடிச்சுப்போட்டு பேசுவேண்டி உள்ளது.
credit ns7.tv