வெள்ளி, 19 ஜூலை, 2019

பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பவர்களை ஊக்குவிக்க மாநகராட்சியின் புதுமையான முடிவு! July 19, 2019


Image
இந்தியாவின் முதல் Garbage cafe, சத்திஸ்கரின் அம்பிகாபூர் மாநகரில் தொடங்கவிருக்கிறது என அந்நகராட்சி மேயர் அறிவித்துள்ளார். 
மனிதர்கள், பறவைகள், விலங்குகள் என அனைத்து உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது பிளாஸ்டிக். இதன் தீமைகளை உணர்ந்து இந்தியாவின் பல மாநிலங்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்துள்ளது. அப்படி இருந்தும், பிளாஸ்டிக் நம் வாழ்வில் மிகவும் அத்தியாவசியமாகிவிட்டதால், அதன் பயன்பாடு குறைந்தபாடில்லை. குப்பைகளில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளோ ஏராளம். அவ்வாறு குப்பைகளில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்து விலைக்கு விற்பவர்களும் அதிகம். 
ஆனால், அவர்களுக்கு கிடைக்கும் மிக குறைந்த வருமானத்தால், அவர்களின் உணவுத்தேவையை பூர்த்தி செய்ய முடிவதில்லை. அவர்களுக்கு உதவும் காரணத்திற்காக சத்திஸ்கர் மாநிலத்தின் அம்பிகாபூர் மாநகராட்சி, புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளது. அதாவது, அவர்களுக்கு என பிரத்யேகமான Garbage cafe என்ற உணவு விடுதியை தொடங்கி, அதில் ஏழைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவு விற்பனை செய்பவர்களுக்கு உணவு வழங்கலாம் என்று முடிவெடுத்துள்ளது.
News7 Tamil
அதன்படி, ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்துவருபவர்கள் மதிய உணவு சாப்பிட்டுக்கொள்ளலாம் எனவும், அரை கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்துவருபவர்கள் காலை உணவு எடுத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த உணவு விடுதி, நகரின் பேருந்து நிலையத்தில் அமைக்கப்படும் எனவும் இதற்காக 5 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நகராட்சியின் மேயர் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களுக்கு தங்குமிட வசதியும் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். மாநகராட்சியின் இந்த புதிய முடிவு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 
credit ns7.tv