கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமையிலான அரசு தோல்வி அடைந்ததையடுத்து அம்மாநிலத்தில் பாஜக ஆட்சியமைக்க உள்ளது. எனவே, 4வது முறையாக எடியூரப்பா முதலமைச்சராகும் நிலை உருவாகி உள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேர் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் கெடு, உச்சநீதிமன்றத்தில் முறையீடு என நாளுக்கு நாள் அரங்கேறிய திருப்பங்களால், கர்நாடக அரசியல் களம் அதிர்ந்தது.
இதற்கிடையே கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த சில நாட்களாக நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான தீர்மானத்துக்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் குமாரசாமி, அரசியலுக்கு வரவேண்டும் என தான் ஆசைப்பட்டது கிடையாது எனவும், காலத்தின் கட்டாயத்தால் தான் அரசியலில் நுழைந்ததாகவும் உருக்கமாக பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடமும் மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும், தான் முதலமைச்சராக காரணமாக இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், தான் வாழ்கையில் பல தவறுகளை செய்துள்ளதுடன், நல்ல விஷயங்களையும் பல செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார், ஊழல் செய்து பின்வாசல் வழியாக ஆட்சியமைக்க பாஜக முயற்சித்து வருவதாகவும் குமாரசாமி குற்றம்சாட்டினார்.
இதனைத்தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் குமாரசாமிக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகின. இதனால் 6 வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமி தலைமையிலான ஆட்சி தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் வஜூபாய் வாலாவிடம் குமாரசாமி வழங்கினார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால், 14 மாதங்களில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணியின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
அதன்பின் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என குறிப்பிட்டார். கர்நாடகாவில் நிலையான, செயலாற்றும் ஆட்சியை தருவோம் என மக்களுக்கு உறுதி அளிப்பதாக தெரிவித்துள்ள அவர், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகே, ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைக்கோர உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
credit ns7.tv