மக்களவையில் சில தினங்களுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் தடை மசோதாவை, மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், அரசியல் பூதக்கண்ணாடி வழியாக, இந்த மசோதாவைப் பார்த்து, அதனை வாக்கு வங்கி அரசியலாக மாற்றிவிட வேண்டாம் என உறுப்பினர்களை கேட்டுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பேசிய பாஜக எம்.பி ராகேஷ் சின்ஹா, முத்தலாக் தடை மசோதாவை, நாடாளுமன்ற தேர்வுக் குழுவுக்கு அனுப்புவது, தாலிபான் சிந்தாந்தத்திற்கு ஆதரவளிப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கிவிடும் என குறிப்பிட்டார். எனினும், முத்தலாக் தடை மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் உறுப்பினர்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், முத்தலாக் தடுப்பு மசோதாவுக்கு, மாநிலங்களவையில் அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது. அந்த மசோதாவுக்கு அக்கட்சி உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார், மக்களவையில் ஆதரவு தெரிவித்த நிலையில், மாநிலங்களவையில் பேசிய அதிமுக உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், முத்தலாக் தடுப்பு மசோதாவை, நாடாளுமன்ற சிறப்பு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும், என வலியுறுத்தினார். முத்தலாக் மசோதாவில் உள்ள சில பிரிவுகள், ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை என்று குறிப்பிட்ட அவர், அந்த மசோதாவை தற்போதைய வடிவில் நிறைவேற்றக் கூடாது, என்றும் கேட்டுக்கொண்டார்.
இதுபோல், முத்தலாக் மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும், என்று அதிமுக உறுப்பினர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் வலியுறுத்தினார். அவரது பேச்சையடுத்து, முத்தலாக் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதுபோல், முத்தலாக் தடை மசோதாவுக்கு, மாநிலங்களவையில் திமுக எம்.பி., திருச்சி சிவா கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினார். இந்த மசோதா அரசியல் நிர்ணய சட்ட சாரத்திற்கு எதிரானது, என குறிப்பிட்ட அவர், முஸ்லிம் பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதாக கூறும் இந்த மசோதா, முஸ்லிம் ஆண்களை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளுகிறது, என்றும் கூறினார். மேலும், பெண்களின் உரிமைகளுக்காக முத்தலாக் மசோதா கொண்டு வரப்பட்டதாக கூறும் பாஜக அரசு, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஏன் கொண்டு வரவில்லை?, என்றும் திருச்சி சிவா கேள்வி எழுப்பினார்.
விவாதத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் எம்.பி. அமீயாஜ்னிக், ஒரு சமூகத்தைச் சேர்ந்த பெண்களை பாதுகாக்கவே இந்த முத்தலாக் தடை மசோதா கொண்டு வரப்படுவதாகவும், அனைத்து தரப்பு பெண்களுக்கும் சம உரிமை, அங்கீகாரம் அளிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவுடன், பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். தெலுங்கு தேசம், டிஆர்எஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன.
இதையடுத்து, முத்தலாக் தடை மசோதா மீதான விவாதம் முடிவடைந்த நிலையில், வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், முத்தலாக் தடை மசோதாவுக்கு ஆதரவாக 99 பேரும், எதிராக 84 பேரும் வாக்களித்தனர். இதையடுத்து, மசோதா நிறைவேறியதாக மாநிலங்களவை தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான வெங்கையா நாயுடு அறிவித்தார். அடுத்தகட்டமாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த பிறகு, இந்தியாவில் முத்தலாக் தடைச் சட்டம் அமலுக்கு வரும்
credit ns7.tv