புதன், 17 ஜூலை, 2019

கர்நாடகா அரசியல் குழப்பம் - அதிருப்தி MLAக்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு...! July 17, 2019

credit ns7.tv
Image
அதிருப்தி MLA-க்கள் ராஜினாமா மீது நடவடிக்கை எடுக்குமாறு, கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்ததால், ஆளும் குமாரசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர்களது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொள்ளாததால், உச்சநீதிமன்றத்தில் அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கு தொடர்ந்தனர். 
இந்த வழக்கில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு இன்று காலை தீர்ப்பளித்தது. அரசியல் சாசன பதவி வகிக்கும் சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும், சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. எனினும் சபாநாயகருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பின்பற்றாமல், அதற்கு எதிராக முடிவெடுக்கும்போது, நீதிமன்றம் தலையிட முடியும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது. 
எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா கடிதங்கள் மீதான முடிவுகளை, இந்த நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார், தீர்ப்பை வணங்கி ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். அரசியல் சாசனம் மற்றும் லோக்பால் விதிகள் பாதிக்காத வகையில், எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ள கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா, குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதால், ஆட்சியில் நீடிக்கும் தார்மீக உரிமையில்லை என தெரிவித்துள்ளார். நாளை அவர் பதவி விலக வேண்டும் என்றும் எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார். சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடத்தில் முதலமைச்சர் குமாரசாமி சிறப்பு வழிபாடு நடத்தினார்.