தனியார் நிறுவனங்களில் 75% இடஒதுக்கீடு தரப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தற்போது நிறைவேற்றியுள்ளார்.
ஆந்திர முதல்வராக பொறுப்பேற்றது முதலே அதிரடியாக செயலாற்றி வருகிறார் ஜெகன்மோகன் ரெட்டி. அவரின் தேர்தல் வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமானவைகளில் ஒன்றான தனியார் நிறுவனங்களில் உள்ளூர்வாசிகளுக்கு 75% இடஒதுக்கீடு தரப்படும் என்ற வாக்குறுதிக்கு செயல்வடிவம் கொடுத்துள்ளார்.
தனியார் நிறுவனங்களில் மாநில மக்களுக்கு 75% இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவினை நேற்று ஆந்திர சட்டப்பேரவையில் தாக்கல் செய்து சட்டமாக்கியுள்ளார் ஜெகன். இதன் மூலம் தனியார் நிறுவனங்களில் ஆந்திர மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்துள்ளது. மேலும் இந்தியாவிலேயே இதுபோன்ற சட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலம் என்ற பெருமையையும் ஆந்திரா தற்போது பெற்றுள்ளது.
தேர்தலுக்கு முன்னதாக தனது பாதயாத்திரையின் போது உள்ளூர் மக்களுக்கு தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு தருவதாக உறுதியளித்திருந்தார் ஜெகன், தற்போது அதனை வெற்றி பெற்று நிறைவேற்றவும் செய்துள்ளார்.
உள்ளூர்வாசிகளுக்கு வேலைக்கு தகுந்த போதுமான திறமைகள் இல்லாமல் இருந்தால், மாநில அரசுடன் இணைந்து நிறுவனங்கள் அவர்களுக்கு பயிற்சியளித்து பின்னர் பணியமர்த்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே நிறுவனங்கள் மேற்கூறிய காரணங்களை முன்வைத்து இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதிலிருந்து தப்பிக்க முடியாது.
மாநில அரசின் இந்த சட்டத்தின் மூலம் சாதக, பாதகங்கள் கலந்தே உள்ளது. உள்ளூர் வாசிகள் பயன்பெறலாம் என்றாலும், மாநில அரசு அதிகளவிலான திறன் மேலாண்மை பயிற்சி நிலையங்களை கட்டமைக்க வேண்டும் என்று அமரராஜா நிறுவன தலைவர் விஜய் நாயுடு கூறினார்.
ஆந்திராவை போலவே மத்திய பிரதேச மாநிலத்திலும் தனியார் நிறுவனங்களில் 70% இடஒதுக்கீட்டினை உள்ளூர் மக்களுக்கு தரும் வகையில் சட்டமியற்றப்போவதாக சட்டப்பேரவையில் முதல்வர் கமல்நாத் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
credit ns7.tv