கர்நாடக சட்டபேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று மாலை 6 மணிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என முதலமைச்சர் குமாரசாமிக்கு சபாநாயகர் ரமேஷ்குமார் கெடுவிதித்துள்ளார்.
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளக் கூட்டணியைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 15 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து குமாரசாமி தலைமையிலான அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்துவருகின்றனர்.
எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவையடுத்து கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த வியாழக்கிழமையன்று முதலமைச்சர் குமாரசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார். அந்த தீர்மானம் மீது அன்றே வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆளுநர் வஜூபாய் படேல் இரு முறை கெடுவிதித்தும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாமல் மூன்றாவது நாளாக நேற்றும் கர்நாடக சட்டபேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது இன்று நிச்சயம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என சபாநாயகர் ரமேஷ்குமார் பலமுறை வலியுறுத்தியபடி இருந்தார். உலகம் நம்மை உற்றுநோக்குகிறது, என்னை இதுபோன்ற நெருக்கடியிலேயே இருக்கச்செய்யாதீர்கள் என ஆளும் கூட்டணி உறுப்பினர்களை நோக்கி பல முறை உரத்த குரல் எழுப்பியும், உருக்கமாகவும் கேட்டுக்கொண்டபடியே இருந்தார்.
ஆனால் அதை பொருட்படுத்தாத காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள உறுப்பினர்கள் விவாதத்தைத் தொடர்ந்துகொண்டே இருந்தனர். எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதம் மீது சபாநாயகர் முடிவு எடுக்கும் வரை விவாதம் நடத்தப்படும் என அவர்கள் கூறினர். இதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் கடும் அமளி நிலவியது.
இதற்கிடையே முதலமைச்சர் குமாரசாமி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக நேற்று மாலை வதந்தி பரவியது. அவரது ராஜினாமா கடிதம் என்று ஒரு கடிதம் சமூக ஊடகங்களில் வைரலானது. ஆனால் பின்னர் இதனை சட்டப்பேரவையில் மறுத்த குமாரசாமி, இது போலியான கடிதம் என்றும் தாம் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றும் கூறினார். மலிவான விளம்பரத்திற்காக இப்படி போலியான கடிதத்தை சிலர் பரவ விட்டுள்ளதாக அவர் வேதனை தெரிவித்தார்.
வாதம் நடைபெற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு மீது ஓட்டெடுப்பு நடத்தப்படாமல் விவாதம் தொடர்ந்தது. இறுதியில் வேறு வழியின்றி இரவு 11.45 மணிக்கு பேரவையை ஒத்திவைத்த சபாநாயகர் ரமேஷ்குமார், பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடும் என்றார்.
மாலை 4 மணிக்குள் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீதான விவாதத்தை நடத்திமுடித்துவிட்டு 6 மணிக்குள் அந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என முதலமைச்சர் குமாரசாமிக்கு சபாநாயகர் ரமேஷ்குமார் கெடு விதித்ததார். இன்றாவது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுமா குமாரசாமி தலைமையிலான அரசு கவிழுமா அல்லது தப்புமா என்கிற கேள்விகளுடன் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த குமாரசாமி தலைமையிலான அரசுக்கு உத்தரவிடக்கோரி இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.
credit ns7.tv