புதன், 31 ஜூலை, 2019

TAMILNADU BOVINE BREEDING சட்டம் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவானது என புகார்! July 31, 2019

Image
மாடுகளின் இனப்பெருக்க நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்காக தமிழக அரசால் இயற்றப்பட்டுள்ள TAMILNADU BOVINE BREEDING என்ற சட்டம் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவானது என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது.  
தமிழகத்தில் மாடுகள் மற்றும் எருமைகளின் இனப்பெருக்க நடவடிக்கைளை முறைப்படுத்துவதற்காக, TAMILNADU BOVINE BREEDING ACT, 2019 என்ற சட்டத்தினை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. இந்தப் புதிய சட்டத்தின் படி கால்நடைத்துறை அமைச்சகத்தின் சார்பில் ஒரு புதிய அமைப்பு உருவாக்கப்படும். ஹோல்ஸ்டைன், ஃபெர்சியன் போன்ற வெளிநாட்டு மாட்டு இனங்களை வளர்த்து வருபவர்கள் பாரம்பர்யமான காளைகளான பூச்சிக் காளைகளையோ பொலி காளைகளையோ வைத்திருக்கக் கூடாது. 
அதுவே நாட்டு பசுக்களை வைத்திருப்பவர்கள், காளைகளை வளர்த்துக் கொள்வதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. ஆனால் அந்தக் காளைகளை அரசாங்கம் உருவாக்கவிருக்கன்ற புதிய அமைப்பில் பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம். ஒருவேளை அந்தக் காளை உடற்தகுதியுடன் இல்லாத பட்சத்தில், அந்தக் காளைகளை அரசாங்கமே கொன்றுவிடவும் சட்டத்தில் இடமுள்ளது. இது மாடுகளின் இனப்பெருக்கத்திற்கு சினை ஊசிகள் மட்டும் தான் தீர்வு என்கின்ற அவல நிலையை நோக்கித் தள்ளும் நடவடிக்கை என்று சீறுகிறார்கள்  கால்நடைத்துறை ஆர்வலர்கள்.
இதுவரை தமிழகத்தில் மாடுகளுக்குத் தேவையான சினை ஊசிகளை அரசாங்கமே மலிவு விலையில் 40 ரூபாய்க்கு வழங்கி வருகிறது. இந்த சட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டால் இதுநாள்வரை அரசாங்கத்திடம் இருந்த சினை ஊசித் தயாரிப்பானது தனியார் நிறுவனங்களின் வசம் சென்றுவிடும். தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 80 லட்சம் மாடுகள் உள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை செயற்கை முறையில் கருவூட்டப்படும் 90 சதவீத மாடுகள் அரசாங்கம் வழங்குகின்ற மலிவு விலை சினை ஊசிகளைத் தான் பயன்படுத்துகின்றன. 
இந்நிலையில் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால்  தனியார் நிறுவனங்கள் வைக்கிறது தான் விலை என்கிற நிலை ஏற்படும். இதனால் தற்போது நாற்பது ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு சினை ஊசி 500 ரூபாய் வரைக்கும் விற்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதே போல் மாடு அல்லது காளை வைத்து இருக்கும் எந்த விவசாயியின் வீட்டையோ தோட்டத்தையோ, எப்பொழுது வேண்டுமானாலும், அரசாங்க அதிகாரிகளால் சோதனை இட முடியும் கஞ்சா, போதைப் பொருட்கள் வைத்து இருப்பவர்களைப் போல, மாடு வளர்ப்பவர்களின் வீடுகளை சோதனை இடுவது நியாயமா என்ற கேள்வியை எழுப்பிறார்கள் பொதுநல ஆர்வலர்கள். 
 
பூச்சி காளைகள் மற்றும் பொலி காளைகளை வளர்த்து வருபவர்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பில் தங்களுடைய காளைகளைப் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாகப்பட்டுள்ளது. அப்படிப் பதிவு செய்யவிட்டாலோ, தவறாகப் பதிவு செய்து இருந்தாலோ, ஐம்பதாயிரம் ரூபாய் அதற்கான நிபந்தனையாக விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. 
25000  ரூபாய் கடனுக்கும், 40000 /- ரூபாய்க் கடனுக்கும் தற்கொலை செய்து கொள்ளும் வறுமையில்  இருக்கும் விவசாயிகளிடம், நிபந்தனைத் தொகையாக 50000 ரூபாய் செலுத்த வேண்டும் எனச் சட்டம் இயற்றி உள்ளது எந்தவகையில் நியாமானது எனக் கொதிக்கிறார்கள் விவசாய அமைப்புகள். சட்டமன்றத்தில் இந்த சட்டத்திற்கு, திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பிச்சாண்டியைத் தவிர வேறு எந்தவொரு சட்டமன்ற உறுப்பினரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. 8,000 வருட காலமாக மாடுகளைப் பிள்ளைகள் போல பராமரித்து வந்த மக்களிடமிருந்து மாடுகளை அரசாங்கமே பிரிப்பது சரியா என்பதுவே கால்நடை ஆர்வலர்களின் ஆதங்கமாக உள்ளது. 

credit ns7.tv