வெள்ளி, 19 ஜூலை, 2019

காவிரியில் தண்ணீர் திறப்பு! July 19, 2019

credit ns7.tv
Image
கர்நாடக அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பால் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 
தமிழகம் முழுவதும் உள்ள அணைகள், நீர்த்தேக்கங்கள் பெரும்பாலானவை வறண்டு போய் உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தண்ணீர் பற்றாகுறை நிலவி வருகிறது. இந்நிலையில் காவிரியிலிருந்து 9.2 டிஎம்சி நீர் திறக்கக்கோரி காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
எனினும், அதனை ஏற்காமல் கர்நாடக அரசு காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடாததால் தமிழகத்தில் உள்ள மேட்டூர், கல்லணை போன்ற அணைகள் வறண்டு போய் காட்சி அளித்து வருகின்றன. இதனால் தமிழக விவசாயிகள், பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில் தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கிய நிலையில், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. 
இதன்காரணமாக கர்நாடகவில் உள்ள கே.ஆர்.எஸ்., கபிணி போன்ற அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து கே.ஆர்.எஸ். அணையிலிருந்து வினாடிக்கு இரண்டாயிரம் கன அடி நீரும், கபிணி அணையிலிருந்து வினாடிக்கு 500 கன அடி நீரும் தமிழகத்திற்கு கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது. இந்த நீரானது, நாளை காலைக்குள் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வந்தடையும் என கருதப்படுகிறது.