பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் அடுத்த தவணை அதிவிரைவில் கிரெடிட் ஆகவிருக்கிறது. நாடு முழுவதும் 10 கோடி விவசாயிகள் பயன்படுத்தும் இந்தத் திட்டத்தில் இன்னும் விவசாயிகள் முழுமையாக இணையவில்லை என்பது வேதனைக்குரியது.
உணவழிக்கும் உழவனை பாதுகாப்பது தேசத்தின் கடமை. அந்த அடிப்படையிலேயே விவசாயிகளுக்கான திட்டங்கள் செயல்பாட்டுக்கு வருகின்றன. விவசாயிகளுக்கு தேசிய அளவில் அமைந்துள்ள மிக முக்கியமான நலத்திட்டம், பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா.
இந்தத் திட்டம் நேரடியாக விவசாயிகளுக்கு நிதி உதவியை வழங்கும் திட்டம் ஆகும். 4 மாதங்களுக்கு ஒருமுறை 2000 ரூபாய் என்கிற விதமாக ஆண்டுக்கு 6,000 ரூபாயை இந்தத் திட்டம் விவசாயிகளுக்கு வழங்குகிறது. நாடு முழுவதும் 10 கோடி விவசாயிகள் இந்தத் திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறுகிறார்கள்.
PM Kisan Samman Nidhi 2020 Status @pmkisan.gov.in: பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா
விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக இந்தத் தொகை அனுப்பப் படுவது குறிப்பிடத்தக்கது. எனவே இடைத்தரகர்களோ, பணம் பெறுவதில் சிரமங்களோ இல்லாத எளிய திட்டம் இது. இன்னமும் இந்தத் திட்டத்தில் விவசாயிகள் முழுமையாக இணையவில்லை என்பதுதான் வேதனை.
135 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் வெறும் 10 கோடி அளவில்தான் விவசாயிகள் இந்தத் திட்டத்தில் பதிவு செய்து பயன் பெறுகிறார்கள். எனவே தகுதியான விவசாயிகள் தங்கள் ஆதார் எண் உள்ளிட்ட ஆவணங்களுடன் உரிய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இதற்கிடையே ஏற்கனவே பயனாளிகளாக இணைந்த விவசாயிகள் 6-வது தவணைத் தொகைக்காக காத்திருக்கிறார்கள். விரைவில் இந்தத் தொகை விவசாயிகளின் கணக்கிற்கு வந்து சேரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பதிவு செய்திருக்கும் விவசாயிகள் pmkisan.gov.in இணையதளத்தில் வலது புறத்தில் உள்ள ‘farmers corner’ என்கிற பகுதியை கிளிக் செய்து, அதில் தங்களது மொபைல் எண் அல்லது ஆதார் எண்ணை கொடுத்து தங்கள் அக்கவுண்ட் நிலையைத் தெரிந்து கொள்ளலாம். புதிதாக இந்தத் திட்டத்தில் பதிவு செய்ய விரும்புகிறவர்களும் அதே இடத்தில் பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.