ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

தமிழகத்தில் ஒரே நாளில் 3 மாணவர்களின் உயிரை பறித்த நீட்!

 


நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் இன்று (12.09.2020) மேலும் ஒரு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெறவுள்ளது. நீட் தேர்வுக்காக மாணவர்கள் தயாராகி வருகின்றனர். பல்வேறு மாநில அரசுகளின் எதிர்ப்பையும் மீறி நாளை இத்தேர்வு நடக்க உள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் இன்று மட்டும் 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அதிகாலை மதுரையை சேர்ந்த ஜோதி ஸ்ரீதுர்கா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள் இன்று மாலை தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியை சேர்ந்த ஆதித்யா என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டார். ஆனால் இவர்களை தொடர்ந்து மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலை சுற்றி ரோட்டில் உள்ள இடையன் பரப்பு பகுதியை சேர்ந்தவர் எலக்ட்ரிக் கடை உரிமையாளர் முருகேசன். இவரது மகன் மோதிலால் (21) என்பவர் நாளை நடைபெறவிருக்கும் நீட் தேர்வுக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்துள்ளார். இந்நிலையில், நீட் தேர்வு அச்சத்தால் மோதிலால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

நாளை பிற்பகல் 2 மணிக்கு நீட் தேர்வு நடைபெறும் நிலையில் தேர்வு அச்சம் காரணமாக இன்று ஒரே நாளில் 3 பேர் தற்கொலை செய்திருப்பது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.