ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

பீகார் தேர்தல்: லாலு பிரசாத் யாதவுடன் கைகோர்க்கும் ஜார்க்கண்ட் முதல்வர்!

 லாலு பிரசாத் யாதவுடனான சந்திப்புக்கு பிறகு எதிர்வரும் பீகார் சட்டமன்ற தேர்தலை ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் இணைந்து சந்திக்க இருப்பதாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

கால்நடை தீவிர ஊழல் வழக்கில் 14 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் உடல்நலக்குறைவு காரணமாக ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

லாலு பிரசாத்தை இன்று மருத்துவமனையில் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு திரும்பிய ஜார்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சித் தலைவருமான ஹேமந்த் சோரன், பீகார் தேர்தலை ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் சந்திப்பதற்காக ஆயத்தமாகி வருவதாக தெரிவித்தார். இது தொடர்பாக லாலுவை சந்தித்து பேசியதாகவும் கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், முன்னாள் மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாகா தலைமையிலான RLSP, JMM போன்ற கட்சிகள் உள்ளன. ஜார்க்கண்ட் முக்தி மோர்சா 12 சீட்கள் கேட்டுள்ளதாகவும், ராஷ்டிரிய ஜனதா தளம் 2 அல்லது 3 சீட்கள் வரை மட்டுமே தர முடியும் என கூறியதாக தெரிகிறது.