சனி, 4 ஆகஸ்ட், 2018

அசாம் விவகாரத்தில் மம்தா பானர்ஜி மீது மேலும் 2 புதிய வழக்குகள் பதிவு! August 3, 2018

Image

அசாம் கணக்கெடுப்பு விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மீது புதிதாக மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியிருக்கும் வங்கதேச நாட்டினரை அடையாளம் காணும் வகையில் தேசிய குடிமக்கள் கணக்கெடுக்கும் பணி (National Register of Citizens - NRC) நடைபெற்றது. இந்த கணக்கெடுப்பின் வரைவு அறிக்கை கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி அம்மாநில மக்கள் தொகையில் 40 லட்சம் பேர் விடுபட்டிருந்தனர். அவர்கள் சட்டவிரோத குடியேற்றம் அடைந்தவர்கள் என்று கருத்தில் கொள்ளப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடுமையாக சாடியுள்ளார்.

இது உள்நாட்டுப் போருக்கும், ரத்தக்களரிக்கும் வழிவகுக்கும் என மம்தா பானர்ஜி பேசியிருந்தார். மம்தாவின் இப்பேச்சை பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கடுமையாக கண்டித்தனர். பாராளுமன்றத்திலும் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மம்தா மீது அசாம் மாநிலத்தின் திப்ரூகர் நகரில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் நாட்டு மக்களின் ஒற்றுமையை சீர்குழைக்கும் வகையிலும், மாநிலத்தின் அமைதியின்மையை உருவாக்குவதோடு, மக்களை தூண்டிவிடும் வகையில் மேற்கு வங்க மாநில முதல்வர் பேசியதாகக் கூறி பான் பஜார் மற்றும் பசிஸ்தா நகர் காவல்நிலையங்களில் தலா ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அசாம் மாநில காவல்துறை டிஜிபி குலாதர் சைகியா கூறியுள்ளார்.

இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறும்போது, நாம் ஒரு அசாத்திய நெருக்கடி நிலையில் வசித்து வருகிறோம், நாட்டில் ஜனநாயகம் இல்லை என்றார். அசாமில் அமைதி நிலவுவதாக கூறுகிறார்கள் அப்படியெனில் அங்குள்ள சில மாவட்டங்களில் எதற்காக 144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கிறது என கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து அசாம் மாநிலத்திற்கு நிலைமையை அறிந்துகொள்வதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 8 பேர் கொண்ட குழு வந்தபோது அவர்கள் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

மம்தா பானர்ஜியின் சொந்தக்கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு:

இதனிடையே மம்தா பானர்ஜியின் இப்பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசாம் மாநிலத் தலைவர் திவிபன் பதக் நேற்று திடீரென ராஜினாமா செய்துள்ளார். மம்தாவின் கட்சியைச் சேர்ந்த ஒரு மாநிலத் தலைவரே அவரின் பேச்சை கண்டிக்கும் விதமாக ராஜினாமா செய்திருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை கூட்டியுள்ளது.