நம் உணவில் மிக அவசியமானதாக இடம்பெற்றிருப்பது உப்பு. ஆனால், உப்பு அதிகமாக சேர்த்துக்கொள்ளக்கூடாது என்று பலர் கூறுவதை கேட்டிருப்போம். ஒரு நாளைக்கு சாப்பிடவேண்டிய அளவை விட இரண்டு மடங்கு அதிகமாக சாப்பிட்டால் மட்டுமே உடல்நல கோளாறுகள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்படியானால், ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கேள்விக்கு பதில் அளிக்கிறது இந்த செய்தி.
World Health Organisation என்ற அமைப்பு, ஒரு நாளைக்கு 5 கிராம் உப்பு மட்டுமே நம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. ஆனால், இந்த அளவை விட இரண்டு மடங்கு அதிகமாக சேர்த்துக்கொண்டால், உடலில் உள்ள சோடியம் அளவு அதிகரித்துவிடும் என்று எச்சரித்துள்ளனர். ரத்த அழுத்தம், வாதம், மாரடைப்பு போன்றவை சோடியம் அதிகரித்தால் ஏற்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா உட்பட 18 நாடுகளை சேர்ந்த 95,700 பேர்களை ஆய்வு செய்ததில், இந்தியர்கள் ஒரு நாளைக்கு 10.98 கிராம் உப்பை அவர்களது உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது, பரிந்துரை செய்யப்பட்ட அளவை விட 2 மடங்கு அதிகம். ஆதலால், இந்த நிலை மாற வேண்டும் என மருத்துவர்களும் ஆய்வு மேற்கொண்டவர்களும் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, பிரிட்டானியா, கெலாக்ஸ், பதஞ்சலி போன்ற இந்திய நிறுவனங்களிடம் 2020ம் ஆண்டிற்குள் அவர்கள் தயாரிக்கப்படும் உணவு பொருட்களில் உப்பு, கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த அலோசனை கொடுத்துள்ளனர்.
வெளி உணவுகளையும், பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவு பொருட்களை தவிர்த்து, வீட்டில் சமைக்கும் உணவு பொருட்களை சாப்பிட்டாலே இது போன்ற அதிக உப்பு சேர்த்துக்கொள்வதில் இருந்து தப்பிக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.