திமுக செயற்குழுக் கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், திமுகவுக்கு தாம் திரும்புவதை ஸ்டாலின் விரும்பவில்லை என மு.க.அழகிரி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதனால் திமுக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிடத்துக்கு இன்று குடும்பத்தினருடன் சென்ற மு.க.அழகிரி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தந்தையின் சமாதியில் மன ஆதங்கத்தை வெளிப்படுத்தியதாக கூறினார். கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் தன்னை ஆதரிப்பதாகவும் அவர் கூறினார். திமுகவில் தற்போது தான் இல்லை என்பதால் நாளை நடைபெறும் செயற்குழு கூட்டம் பற்றி கருத்து கூற இயலாது எனவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பிரபல ஆங்கில தொலைக்காட்சிக்கு மு.க.அழகிரி அளித்த பேட்டியில், திமுகவுக்கு தாம் திரும்புவதை மு.க.ஸ்டாலின் விரும்பவில்லை என்றும், திமுகவில் கட்சிப் பதவிகள் பறிக்கப்படுகின்றன எனவும் கூறினார். பெரும்பாலான திமுக தலைவர்கள் நடிகர் ரஜினிகாந்துடன் தொடர்பில் உள்ளனர் என்று குற்றம்சாட்டிய அழகிரி, தற்போது பொறுப்பில் உள்ள தலைவர்கள், திமுகவை அழித்துவிடுவார்கள் எனவும் விமர்சித்தார்.
தாம் கட்சிக்குள் வந்தால் வலிமையான தலைவராகிவிடுவேன் என பலர் அச்சம் அடைகின்றனர் என்று தெரிவித்த அழகிரி, திமுகவில் பதவிகள் விற்கப்படுவதாகவும் தெரிவித்தார். திமுகவை அழிக்க நினைப்பவர்களை கருணாநிதியின் ஆன்மா தண்டிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். அழகிரியின் இந்த பகிரங்க குற்றச்சாட்டால், திமுக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.