மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி உடல்நலக்குறைவு காரணமாக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் இன்று காலை காலமானார்.
89 வயதான அவர், சிறுநீரகம் பாதிப்பு காரணமாக தொடர்ந்து கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே அவருக்கு பக்கவாதமும் ஏற்பட்டது. தொடர் சிகிச்சைக்கு பிறகு சற்று உடல்நலம் தேறி வந்த அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் நிலை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், மருத்துவர்களின் தொடர் சிகிச்சை காரணமாக சோம்நாத் சட்டர்ஜி காலமானார்.
சோம்நாத் சட்டர்ஜி, நாடாளுமன்ற எம்.பி.யாக 10 முறை இருந்த மூத்த அரசியல்வாதி ஆவார். 2008–ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரவை வாபஸ் பெற்ற பிறகும், சபாநாயகர் பதவியை அவர் ராஜினாமா செய்யாததால், அக்கட்சியை விட்டு விலக்கி வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் கட்சி நடவடிக்கைகளிலிருந்து விலகியிருந்தார்.
சோம்நாத் சட்டர்ஜி மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், நாடாளுமன்றத்தின் சக்திவாய்ந்த தலைவராக விளங்கிய சோம்நாத் சட்டர்ஜியின் இழப்பு, மேற்குவங்க மாநிலம் மற்றும் நாட்டிற்கே மிகப்பெரிய இழப்பு என குறிப்பிட்டுள்ளார். இதேபோல் பிரதமர் மோடி ட்விட்டரில், நாடாளுமன்றத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டியவர் எனவும், ஏழை மக்களுக்காக பாடுபட்டவர் எனவும் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், கட்சிகளை கடந்தும் நேசிக்கப்பட்ட தலைவர் என நினைவுக்கூர்ந்துள்ளார்.