கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புக்காக உடனே ரூ.400 கோடி ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் வரலாறு காணாத கன மழையால் கோழிக்கோடு, இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மாநிலம் முழுவதும் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஆயிரத்து 750 தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மழை, வெள்ளம் மற்றும் மண் சரிவால் மாநிலம் முழுவதும் இதுவரை 39 பேர் பலியாகி உள்ளனர். 1,500 வீடுகள் பலத்த சேதம் அடைந்தன.
இந்நிலையில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் ஆய்வு செய்தார். அப்போது முதற்கட்டமாக ரூ.100 கோடி உடனடியாக அளிக்கப்படும் என அறிவித்தார். எனினும், வெள்ள பாதிப்புக்காக உடனே ரூ.400 கோடி வழங்க வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், வெள்ளபாதிப்புகளால் சுமார் ரூ.8 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும், ரூ.1200 கோடி பேரிடர் நிவாரண தொகையாக வழங்க வேண்டும் எனவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.