
ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் இலவச தொலைபேசி எண் வந்தது எப்படி என கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்து மன்னிப்பு கோரியுள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆவண நிறுவனத்தின் இலவச தொலைபேசி எண் ஆண்ட்ராய்டு போன்களின் காண்டாக்ட் பட்டியலில் தானாகவே பதிவாகி இருப்பது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உதவி எண்களை பதிவிடுமாறு எந்த ஒரு செல்போன் நிறுவனத்தையும் கேட்டுக்கொள்ளவில்லை என ஆதார் ஆணையம் திட்டவட்டமாக மறுத்தது.
இந்நிலையில் ஆதார் உதவி எண்கள் ஆண்ட்ராய்டு செல்போன்களில் பதிவானதற்கு ஆண்ட்ராய்டு இயங்குதளமே காரணம் என கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 2014ம் ஆண்டு உடாய் சேவை எண் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் கவனக்குறைவாக கோடிங் செய்யப்பட்டுவிட்டதே இப்பிரச்னைக்கு காரணம் என்று கூறியுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு மன்னிப்பு கோரியுள்ள கூகுள் நிறுவனம், ஆண்ட்ராய்டு கருவிகளில் அங்கீரிக்கப்படாத எந்த ஊடுருவலும் நடைபெறவில்லை என உறுதியளித்துள்ளது. இன்னும் சில வாரங்களில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.