ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

இந்தியாவில் கவலைக்குரிய 16 மாவட்டங்களில் சரிபாதி தமிழகத்தில்: உயிரிழப்பு விகிதம் அதிகம்

 கொரோனா உயிரிழப்பில் தேசிய மற்றும் மாநில சராசரி விகிதத்தை விட அதிகமான  உயிரிழப்புகளை பதிவு செய்து வரும் மாவட்டங்கள் கவலைக்குரியவை என்று சுகாதார செயலாளர் கருத்து தெரிவித்தார்.

கொரோனா நோய்த் தொற்றை சிறப்பாகக் கட்டுப்படுத்துதல் மற்றும் சிகிச்சை உள்ளிட்ட வசதிகளை மேலாண்மை செய்வதில் மத்திய – மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த உத்தியிலான செயல்பாட்டின் ஒரு பகுதியாக, மத்திய அமைச்சரவைச் செயலர் தலைமையில் மெய்நிகர் உயர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அகமதாபாத், சூரத், பெலகாவி, பெங்களூரு நகர்ப்புறம், கலாபுராகி, உடுப்பி, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, தூத்துக்குடி,விருதுநகர்; ஹைதராபாத்,மேட்சல் மல்காஜி ஆகிய 16 மாவட்டங்கள் இதில் அடங்கும்.

குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கான ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள இந்த 16 மாவட்டங்களில் மட்டும் இந்தியாவின் 17% ஆக்டிவ் கொரோனா நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றன. தினசரி புதிய பாதிப்புகளை பதிவு செய்து வருவதோடு , ஒரு மில்லியனுக்கு கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை விகிதமும் இங்கு குறைவாக உள்ளது. பரிசோதனைகள் மூலம்   கொரோனா பெருந்தொற்றை உறுதிப்படுத்தும் வகிதமும் இங்கு அதிகளவில் உள்ளது .

மெய்நிகர் உயர் ஆலோசனைக் கூட்டத்தில் நான்கு மாநிலங்களைச் சேர்ந்த சுகாதாரத் துறைச் செயலாளர்கள்,  மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகள்,மாநகராட்சி ஆணையர்கள், தலைமை மருத்துவ அதிகாரிகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கொரோனா உயிரிழப்பைக் குறைக்க சுகாதார அமைச்சகத்தால் வழங்கப்பட்ட ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள்,  மருத்துவ சிகிச்சை நெறிமுறைகள் அனைத்தும்  செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்  என்று மாவட்டங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ச்சியான பராமரிப்பு அணுகுமுறையைப் பின்பற்றி மேற்கொள்ளப்படும்  கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு முயற்சிகள், இறப்பு விகிதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சுகாதார செயலாளர் தெரிவித்தார்.