நடுத்தர வருமானங்கள் கொண்ட நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்துகளை குறாஇவான விலையில் வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது சீரம் இன்ஸ்டிட்யூட். ஏற்கனவே இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உருவாகி வரும் தடுப்பு மருந்தினை உலகெங்கும் சேர்க்கும் பொறுப்பை ஏற்றுள்ளது அந்த நிறுவனம். இந்நிலையில் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றையும் மேற்கொண்டுள்ளது சீரம் நிறுவனம். இந்த ஒப்பந்தத்தின் படி கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியாவிற்கு ரூ. 225க்கு சீரம் நிறுவனம் வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் முதலில் அமெரிக்கா உள்ளது. பிறகு பிரேசில். தற்போது மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 61,537 நபர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 20,88,612 நபர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. அதில் 42,518 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 14,27,006 நபர்கள் இதுவரை கொரோனா வைரஸில் இருந்து முழுமையாக குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் ஆக்ஸ்ஃபோர்ட் மருந்து, மனிதர்கள் மீது இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட பரிசோதனைகளுக்கு தயாராகி வருகிறது. பல்வேறு நாடுகளில் மனிதர்கள் மீது ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் மருந்து சோதனை செய்யப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டின் துவக்கத்தில் இந்த மருந்து பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.