ஆந்திராவில் 39 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு சீருடை, புத்தகங்கள், பை உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் அடங்கிய கிட் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெகனண்ணா கனுகா திட்டத்தின் கீழ் இந்த கிட் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 15,715 பள்ளிகளிலும், 2-வது கட்டத்தில் 14,585 பள்ளிகளிலும் 3-ம் கட்டத்தில் 16,489 பள்ளிகளிலும் இத்திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. இது குறித்து நேரடியாக ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அனைத்துப் பள்ளிகளிலும் மினரல் வாட்டர் வசதி ஏற்படுத்தும் வகையில் தயாரிப்பு ஆலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அதனை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
நவம்பர் 14-ம் தேதி முதல் தொடங்கும் கல்வி உபகரணங்கள் கிட் வழங்கும் நிகழ்வு, மார்ச் 31 2022ல் நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அரசு வழங்கும் பள்ளிப் பொருட்களின் தரத்தில் எந்தவிதமான சமரசமும் இருக்கக் கூடாது என்றும் முறையான சுகாதாரத்தை பராமரிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், ஐஐடி மற்றும் ஜேஇஇ நுழைவுத் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களை தயார்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.