வியாழன், 6 ஆகஸ்ட், 2020

டெல்லியில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: பொதுமக்களை பாராட்டிய கெஜ்ரிவால்


தலைநகர் டெல்லியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 10,000க்கும் கீழ் சென்றுள்ளதை அடுத்து அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பாராட்டியுள்ளார். 

இந்தியாவில் அதிக கொரோனா பாதிப்புகளை சந்தித்த மாநிலங்களில் ஒன்றாக தலைநகர் டெல்லி இருந்து வருகிறது. இங்கு ஆரம்ப காலகட்டங்களில் குறைவான பாதிப்புகள் இருந்தாலும், கடந்த 2 மாதங்களாக அங்கு பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டிருந்தது. இதனை அடுத்து டெல்லி மற்றும் மத்திய அரசு மேற்கொண்ட துரிய நடவடிக்கைகள் காரணமாக அங்கு கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இன்று ஒரு நாளில் 674 பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அங்கு 1,39,156 ஆக உள்ளது. மேலும் இதுவரை 4,033 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

இதனிடையே டெல்லியில் கொரோனாவால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 10,000 இல் இருந்து 9,897 ஆக குறைந்துள்ளது, இதில் வைரஸால் பாதிக்கப்பட்ட 5,000 க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து வீட்டில் தனிமையில் உள்ளனர். 

இந்நிலையில் இது குறித்து தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் , “டெல்லி மக்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். தற்போது நமது கொரோனா தடுப்பு மாதிரி எல்லா இடங்களிலும் விவாதிக்கப்படுகிறது.
.
இருப்பினும் இந்த வைரஸை கணிக்க முடியாதது இது ஒரு மாதம் கழித்து எவ்வாறு பரவுகிறது என்பது எங்களுக்குத் தெரியாது. எனவே, நாங்கள் மனநிறைவுடன் இருக்கக்கூடாது என்று மீண்டும் சொல்கிறேன். ஒரு தடுப்பூசி இருக்கும் வரை, முகமூடி அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது சுகாதாரத்தை பராமரிப்பது போன்ற விதிகளை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்” என அவர் பதிவிட்டுள்ளார்.