கொரோனா வைரஸின் தாக்கம் எதிர்காலத்திலும் நீடிக்கும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுநோயால் உலகளவில் 1,77,66,836 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6,83,218 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, பிரேசில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. கொரோனாவால் மக்களின் வாழ்க்கை முறையே தலைகீழாக மாறிவிட்டது. இதனைக் கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் கொரோனா தொற்றுநோய் ஒரு வகையான பேரழிவு என்றும் இதன் தாக்கம் இன்னும் பல தசாப்தங்கள் நீடிக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர், இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய சுகாதார நெருக்கடியாக கொரோனா பாதிப்பு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். கொரோனா பற்றிய விழிப்புணர்வு அதிகம் ஏற்பட்டிருந்தாலும், பல கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என்று கூறியுள்ள அவர், ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த நாடுகளும் தற்போது உயர்வை சந்தித்து வருகின்றன என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே பொருளாதார பாதிப்பால் பல நாடுகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. அதனால் அமெரிக்கா, பிரேசில், பிரிட்டன், மெக்ஸிகோ ஆகிய நாடுகள் சமீப வாரங்களாக கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன. கொரோனாவைக் கட்டுப்படுத்திய சில நாடுகள் இரண்டாவது அலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.