ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து சட்டப்போராட்டம் மேற்கொள்வோம் - மு.க.ஸ்டாலின்

Image

புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மாணவர்களின் எதிர்கால நலனை காக்கும் நோக்கில் சட்டப்போராட்டங்களை திமுக மேற்கொள்ளும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், வெற்றிகரமாக செயல்பட்டு வரும் 10 மற்றும் + 2 நடைமுறைக்கு மாறாக புதிய கல்விக் கொள்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள 5 + 3 + 4 என்கிற மாற்றம், இளமையிலேயே மாணவர்கள் மீது நடத்தப்படும் உளவியல் தாக்குதல் என்று விமர்சித்துள்ளார்.

கல்வி பொதுப் பட்டியலில் உள்ள நிலையில், மாநில அரசுகளுக்கு உள்ள மிச்சமிருக்கும் அதிகாரத்தையும் பறித்துக்கொள்வது கூட்டாட்சி தத்துவத்தின் மீது விழும் கோடரி வெட்டு என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். புதிய கல்விக் கொள்கையில், தமிழக மாணவர்களின் நலனை பலி கொடுக்க தமிழக அரசு தயாராகிவிட்டதா என்றும் வாய்மூடி இருப்பது ஏன் என்றும்  அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காத அகில இந்தியத் தலைவர்களுடன் தோழமை சக்திகளுடன் இணைந்து திமுக போராடும் எனவும், மாணவர்களின் எதிர்கால நலன் காக்கும் ஒருங்கிணைப்பு முயற்சிகளையும் சட்டப்போராட்டங்களையும் திமுக மேற்கொள்ளும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.