ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடையும் நிலையில், ஆகஸ்ட் 5ம் தேதிக்கு முந்தைய நிலையை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தை முன்னெடுப்போம் என்று யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தெரிவித்தன.
தேசிய மாநாட்டு கட்சி,” இந்திய அரசியலமைப்பு ஜம்மு- காஷ்மீர் மக்களுக்கு அளித்த உரிமைகள் அனைத்தும் வலுக்கட்டாயமாகவும், சட்டவிரோதமாகவும் மீறப்பட்டது. ஆகஸ்ட் 5, ஜம்மு- காஷ்மீர் வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம். மக்கள் உரிமைகளை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தை அமைதியாகவும் சட்டரீதியாகவும் கட்சி போராடும்” என்று தெரிவித்தது.
கடந்த ஆண்டு, ஆகஸ்ட் 5 ஆம் தேதி முடிவு, ஜம்மு- காஷ்மீர் மக்களின் உரிமைகள் மற்றும் கவுரவத்தின் மீதான ஜனநாயகமற்ற தாக்குதல்” என்று கருத்து தெரிவித்த கட்சியின் செய்தித் தொடர்பாளர் இம்ரான் நபி தார், “இந்திய ஒன்றியத்தோடு இணைந்த அந்த தருணத்தில்,ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை வாக்குறுதியை அப்பட்டமாக மீறும் செயல்” என்று தெரிவித்தார்.
ஜம்மு- காஷ்மீர் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட “அரசியலமைப்பு மோசடியை” ஆகஸ்ட் 5 நினைவூட்டுவதாக மக்கள் ஜனநாயக கட்சி சுஹைல் புக்காரி தெரிவித்தார்.
“இது எங்கள் அரசியல் வரலாற்றின் கருப்பு அத்தியாயம் என்றாலும், அரசியலமைப்பு, ஜனநாயகத் தன்மை கொண்ட இந்திய என்ற நாட்டிற்கு ஏற்பட்ட இருண்ட காலத்தை நினைவூட்டுகிறது. ஒரு நாட்டின் இதயமாகவும், ஆன்மாவாகவும் உள்ள அதிகார அமைப்புகள் செயல்பட்ட விதத்தையும், செயல்படாத விதத்தையும் இது உணர்த்துகிறது” என்று தெரிவித்தார்.
கட்சித் தலைவரின் வீட்டுக்காவல் தொடர்ச்சியாக நீட்டிக்கப்படுவது குறித்து கருத்து கூறிய அவர் “முப்தியின் தீர்க்கமான, சமரசமற்ற நிலைப்பாட்டை இது உணர்த்துகிறது. தற்போது, டெல்லி, ஸ்ரீநகரில் இருந்து மக்களை ஆளுகின்ற ஆட்சியாளர்களின் கோழைத்தனத்தையும் இது பிரதிபலிக்கிறது” என்று கருத்து தெரிவித்தார்.
“ஜனநாயக ரீதியாகவும், அமைதியாகவும்” எங்களது எதிர்ப்பை நாங்கள் வெளிப்படுத்துவோம். இருப்பினும், கட்சித் தலைமை விடுவிக்கப்பட்டால் மட்டுமே அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து தெளிவு பிறக்கும் என்றும் தெரிவித்தார்.
சஜாத் லோன் தலைமையிலான மக்கள் மாநாட்டு அமைப்பின் மெய்நிகர் செயற்குழு கூட்டத்தில், “ஆகஸ்ட் 5 மற்றும் அதற்குப் பிந்தைய முடிவுகள் யாவும் “மக்களுக்கு ஏற்கத்தக்கவை அல்ல” என்று வலியுறுத்தினார். ஜனநாயக விரோதமாக, அரசியலமைப்பு சட்டத்தின் நோக்கத்தை புறந்தள்ளும் இந்த முடிவுகள் காஷ்மீர் மக்கள் மீது திணிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.
கட்சியின் செய்தித் தொடர்பாளர் அட்னான் அஷ்ரஃப் மிர் , “எங்களைப் பொறுத்தவரை, ஆகஸ்ட் 5, 2019 ஒரு எதிர்மறையான மைல்கல். எங்கள் அடையாளத்தின் மீதான தாக்குதல் என வரலாற்றில் இந்த நாள் நினைவில் கொள்ளப்படும்,” என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதை போன்று, ஜம்மு காஷ்மீர், வளர்ச்சியில் புதிய உச்சத்தை தற்போது எட்டியுள்ளதா? குடிமக்களின் வாழ்க்கை நிலை எளிதானதாக மாறியதா? மக்கள் தங்கள் உரிமைகளைப் பெற்றார்களா? எத்தனை வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன? என்று காஷ்மீர் சிபிஎம் நிர்வாகி எம்.ஒய் தாரிகாமி கேள்வி எழுப்பினார்.
முன்னதாக, அரசியல் சட்டப்பிரிவு 370 மற்றும் 35-ஏ ஆகியவை ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதம், பயங்கரவாதம், உறவினர்களுக்கு ஆதரவான கொள்கை மற்றும் பெருமளவு ஊழல் என்பதைத் தவிர வேறு எதையும் தரவில்லை. சில மக்களிடம் உணர்வுகளைத் தூண்டிவிடுவதற்கு இந்த இரு சட்டப் பிரிவுகளையும் ஆயுதங்களாக பாகிஸ்தான் பயன்படுத்தி வந்தது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் வளர்ந்திருக்க வேண்டிய அளவுக்கு அங்கு வளர்ச்சிப் பணிகளைச் செய்ய முடியாமல் போனது. நடைமுறையில் உள்ள இந்தக் குறைபாட்டை நீக்கிய பிறகு, ஜம்மு காஷ்மீர் மக்களின் நிகழ்காலம் நல்லதாக மாறுவது மட்டுமின்றி, எதிர்காலமும் வளமிக்கதாக இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போது தெரிவித்தார்.
“சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஓராண்டு நிறைவடைந்த நிலையில், வாக்குறுதிகள் கானல் நீராகவே உள்ளது. நம்பிக்கைய வார்த்தைகள் அனைத்தும் ஒரு மோசடி. ஜம்மு- காஷ்மீர் மக்களுக்கு வளமிக்க எதிர்காலம் அமையும் என்ற பிரதமரின் உரை யதார்த்த வரம்பிற்குள் வரவில்லை”என்று தெரிவித்தார்.