இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை எல்லாம் அச்சுறுத்தி முடக்கி வைத்துள்ளது. கொரோனா வைரச் தொற்று நோய்க்கு பல உலக தலைவர்களும் ஆளாகி வருகின்றனர். இந்தியாவிலும் பல அரசியல் தலைவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உள்ளனர். அண்மையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகத்தில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி செல்வராஜ் ஆகியோர் கோரோன வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.
இந்த நிலையில், இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான காதர் மொய்தீனுக்கு (80) இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக காதர் மொய்தீனுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்துள்ளது. இதையடுத்து அவர் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்துகொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.
காதர் மொய்தீன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவராகவும் அக்கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளராகவும் உள்ளார். இவர் திருச்சியில் அவருடைய வீட்டில் இருந்த நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.