ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

இந்த மாவட்டங்கள்ல அடைமழை வெளுத்து வாங்கப்போகுது – வானிலை மையம் எச்சரிக்கை

கோவை, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திண்டுக்கல், தேனி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக பரவலாக, பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நல்ல மழையை அள்ளித் தந்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் தொடங்கிய பருவமழை தொடக்கத்தில் சரியான அளவில் மழை பெய்யாத நிலையில், படிப்படியாக வேகம் கூடியது. தென் தமிழகத்தில் 13 சதவீதம் கூடுதலாக பருவமழை பெய்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக வடதமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும். மேலும் கோவை, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திண்டுக்கல், தேனி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கக் கூடும். இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்கக் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். இதனால் சுமார் 3.5 மீட்டர் உயரம் வரை அலைகள் எழும்பி வரும். குமரி அருகே உள்ள கடல்பகுதிகள் கொந்தளிப்புடன் இருக்க வாய்ப்புள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் மதியத்திற்கு பின் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புண்டு. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.