சனி, 8 ஆகஸ்ட், 2020

அதிர்ஷ்டவசமாக தீப்பிடிக்கவில்லை: கேரள விமான விபத்தை விவரிக்கும் அதிகாரிகள்

 

கேரளாவில் விமானம் இரண்டாக பிளந்து ஏற்பட்ட விபத்து குறித்து புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. விமான விபத்து நடந்தது எப்படி? என்கிற விதமும் தெரிய வந்திருக்கிறது.

கொரோனா பொதுமுடக்கத்தால், உலகமே திணறிக் கொண்டிருக்கிறது. வெளிநாடுகளில் சிக்கியவர்கள், படாதபாடு பட்டு சொந்த நாட்டுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். மலையாளிகள் பெருமளவில் கேரளாவில் பணியாற்றுவதால், அவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து கேரளாவுக்கு விமானப் பயணம் முக்கியமானதாக இருக்கிறது.

அந்த வகையில் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த விமானத்தில் மொத்தம் 190 பேர் இருந்தனர். அவர்களில் 184 பேர் பயணிகள், 6 பேர் விமான பணிக்குழுவினர்.

கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தை வந்தடைந்த விமானம், 10-வது ஓடுதளத்தில் தரையிறங்க முயன்றது. அப்போது ஓடுதளத்தில் வழுக்கியபடி, அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில் விமானம் 2 பாகங்களாக உடைந்தது.

விமானத்தில் இருந்த பயணிகளும், விமானிகளும் அபயக் குரல் எழுப்பினர். உடனே அருகில் வசித்து வந்த கிராமத்தினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பின்னர் காவல் துறையினர், தீயணைப்புப் படையினர், விமான நிலைய அதிகாரிகள் சென்று விமான இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டு, மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

முதல்கட்டமாக 15 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. நள்ளிரவில் பலி எண்ணிக்கை 17-ஆக உயர்ந்ததாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது. பலியானவர்களில் விமானியும், துணை விமானியும் அடங்குவர். மேலும் 100 பேர் வரை படுகாயம் அடைந்திருக்கிறார்கள். எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

விமான விபத்துக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள். கேரள முதல்வர் பினராயி விஜயன் இரவோடு இரவாக அனைத்துத் துறை அதிகாரிகளையும் மீட்புப் பணி மற்றும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் முடுக்கி விட்டார்.

விமான விபத்து நடைபெற்றபோது அங்கு பலத்த மழை பெய்ததாகவும், 2000 மீட்டர் வரை பார்க்கும் தன்மையில் காலநிலை இருந்ததாகவும் விமானப் போக்குவரத்துத் துறை அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற இந்த விபத்தின்போது, விமானம் 35 அடி பள்ளத்தாக்கில் போய் விழுந்ததாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இரவு 11 மணி வரை மீட்புப் பணிகள் நடைபெற்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.

இரு முறை கோழிக்கோடு விமான நிலையத்தை வட்டமிட்ட அந்த விமானம், அதன்பிறகே இறங்க முயற்சித்ததாக கோழிக்கோடு விமான நிலைய அதிகாரிகள் கூறினர். அதிர்ஷ்டவசமாக விமானம் தீப்பிடிக்கவில்லை என்றும், உடனடியாக தாங்கள் பாதுகாப்புப் பணிகளை செய்துவிட்டதாகவும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

விமானி தீபக் வசந்த் சாத்தே, துணை விமானி அகிலேஷ் குமார் ஆகியோரும் இந்த மோசமான விபத்தில் பலியானார்கள். இவர்களில் தீபக் வசந்த் சாத்தே, இந்திய விமானப் படையில் விங் கமாண்டராக பணியாற்றியவர். பலமுறை கோழிக்கோடு பிரிவில் விமானத்தில் வந்து அனுபவம் மிக்கவர்.