கோவை நரசிபுரம் அருகே தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை பயிற்யின்போது மாணவி லோகேஷ்வரி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக லோகேஷ்வரிக்கு பயிற்சி அளித்த ஆறுமுகம் என்பவரை போலீசார் ஏற்கனவே கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஆறுமுகம் ஒரு போலி பயிற்சியாளர் என்பது தெரியவந்துள்ளது. தங்களது அங்கீகாரத்தை அவர் பெறவில்லை என்பதை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் நேற்று தெளிவுபடுத்தியது.
இந்நிலையில் ஆறுமுகம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆறுமுகத்திற்கு போலி சான்றிதழ் அச்சிட உதவிய ஈரோட்டைச் சேர்ந்த அசோக் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆறுமுகத்துக்கு போலி சான்றிதழ் தயாரித்து அளித்தது தொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.