திங்கள், 13 ஆகஸ்ட், 2018

​குற்றச்செயல்களை தடுப்பதில் மூன்றாவது கண்ணாக செயல்படும் சிசிடிவி கேமராக்கள்! August 13, 2018

Image

குற்றங்களை களைய உதவும் மூன்றாம் கண்ணாக செயல்படும் கண்காணிப்பு காமிராக்களை பொருத்துவது பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில், சென்னை மாநகர காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளிகளை எளிதில் கண்டறியவும் நகரம் முழுவதும் சி.சி.டி.வி எனும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. மூன்றாவது கண் என்ற இயக்கத்தின் மூலம் சிசிடிவி காமிராக்கள் உதவியால் நகரம் முழுவதையும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வர சென்னை பெருநகர காவல்துறை திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

சென்னையில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் காவல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், மக்கள் தொகை அதிகரிப்பிற்கு ஏற்ப குற்றச்செயல்களும் அதிகரித்து வருகின்றன. புதிய குற்றவாளிகள், இளைஞர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரித்திருப்பதால் 
குற்றவாளிகளை கண்டுப்பிடிப்பதும் போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது.

அத்தகைய சவால்களில் போலீஸாருக்கு பெரிதும் உதவுவது கண்காணிப்பு கேமராக்களே. தற்போது சென்னை நகர வீதிகளில் 40 ஆயிரம் சி.சி.டி.வி.காமிராக்கள் உள்ள நிலையில், இதனை விரைவில் 1 லட்சமாக அதிகரிக்க வேண்டுமென சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். 'மூன்றாவது கண்' என்று பெயரிட்டு அதனை இயக்கமாக சென்னை காவல்துறை  செயல்படுத்துகிறது. 
 
கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதால் குற்றங்கள் கணிசமாக குறைந்துள்ளதாக கூறுகின்றனர் காவல்துறையினர். குற்ற நிகழ்வுக்கு பின் காவல்துறைக்கு குற்றவாளிகள் யார் என்பதை அறியவும், அவர்களை பிடிக்கவும் உதவுகிறது என்கிறார் கூடுதல் ஆணையர் ஜெயராம். 
 
முன்பெல்லாம் வணிக வளாகங்கள்,வங்கிகள்,ஏடிஎம் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மட்டுமே சிசிடிவி காமிராக்கள் காணப்படும். தற்போது போலீஸாரின் 'மூன்றாம் கண்' விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், சிறு வியாபாரிகள் உள்ளிட்ட பலர் சி.சி.டி.வி.யை பொருத்தி வருகின்றனர். சென்னையில் பொது இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்துவதற்கு வியாபார நிறுவனங்கள், சமூக அக்கறையுள்ளவர்கள் காவல்துறையினருடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். 
 
குற்றம் நடப்பதை கண்டறிவது மட்டுமல்ல, குற்றச்செயல்களை தடுப்பதிலும் மூன்றாவது கண்ணாக சிசிடிவி கேமராக்கள் செயல்படுகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.