சனி, 11 ஆகஸ்ட், 2018

​இனி ஒரிஜினல் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புத்தகம் தேவையில்லை! August 10, 2018

Image

இனி ஒரிஜினல் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புத்தகம் போன்ற ஆவணங்களை எடுத்துச் செல்லத்தேவையில்லை, மத்திய அரசின் புதிய நடவடிக்கை வாகன ஓட்டிகளுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்த தகவல்களை இத்தொகுப்பில் காணலாம்.

மத்திய அரசின் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் கீழ்  ‘Digi Locker' என்ற மொபைல் செயலி  கடந்த 2015ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் அறிமுகம் செய்யப்பட்டது.

இதில் பான் கார்டு போன்ற அரசு ஆவணங்கள், கல்வி சான்றிதழ்கள் போன்ற முக்கிய ஆவணங்களின் நகல்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம். ஆதார் இணைப்பு பெற்ற மொபைல் எண்கள் மூலம் கணக்கு உருவாக்கிக் கொண்டு இந்த சேவையை வாடிக்கையாளர்கள் பெறலாம். இதில் 1 ஜிபி வரை சேமிப்பு வசதி தரப்படுகிறது.

தற்போது Digi Locker மற்றும் mParivahan போன்ற செயலிகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி. புத்தகம் போன்றவற்றை காண்பித்தால், அதையே தக்க அடையாள ஆவணமாகக் கருதலாம் என மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

மத்திய அரசின் இந்த நடவடிக்கை மோட்டார் வாகனச் சட்டம் 1998ன்படி செல்லுபடியாகும் என இது தொடர்பாக மாநில முதன்மைச் செயலாளர்கள், அனைத்து போக்குவரத்துத் துறை செயலாளர்கள், டிஜிபி/ஏடிஜிபிக்கள் (போக்குவரத்து) மற்றும் அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களின் போக்குவரத்துத் துறை கமிஷனர்களுக்கு மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இது தொடர்பாக கூறும்போது, பல்வேறு தரப்பினரிடம் இருந்து இது தொடர்பான கோரிக்கைகள் எழுந்ததையடுத்து வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்கும் வகையில் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இன்ஸூரன்ஸ் தொடர்பான தகவல்கள் அனைத்தும் mParivahan டேட்டாபேஸில் மத்திய இன்ஸூரன்ஸ் ஆணையத்தால் அப்டேட் செய்யப்படுவதால், அதே தகவல்களே mParivahan செயலியிலும் எதிரொலிக்கும், இதன் காரணமாக இந்த செயலியில் வாகனத்தின் இன்ஸூரன்ஸ் தகவல்கள் அறிந்துகொள்ளமுடிவதால் ஒரிஜினல் இன்ஸூரன்ஸ் ஆவனமும் எடுத்துச் செல்லவேண்டிய அவசியமற்றதாக மாறிவிடுகிறது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை வாகன ஓட்டிகளுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இதன் மூலம் வாகன ஓட்டிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே ஏற்படும் உரசல்கள் தவிர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.