வியாழன், 2 ஆகஸ்ட், 2018

மூடுவிழா காண உள்ள மதுரையின் பழமையான 'ஷாப்பிங் மால்' August 2, 2018

Image

பல நூறு ஆண்டுகள் பழமையான மதுரை 'ஷாப்பிங் மால்' என அழைக்கப்படும் புதுமண்டபம், தற்போது மூடுவிழா காண உள்ளது.

பல நூறு ஆண்டுகள் பழமையான மதுரை 'ஷாப்பிங் மால்' என அழைக்கப்படும் புதுமண்டபம், தற்போது மூடுவிழா காண உள்ளது. என்ன காரணத்திற்காக புதுமண்டபம் மூடப்பட உள்ளது. இந்த மண்டபத்தில் உள்ள வியாபாரிகள் நிலை என்னவாகும்? 

காலத்திற்கு ஏற்றவாறு போட்டி போட்டு கொண்டு மிகப் பிரம்மாண்டமாக உருவாகி கொண்டிருக்கும் ஷாப்பிங் மால்களுக்கு இணையாக மதுரையின் சிறப்புகளில் ஒன்றாக திகழ்ந்தவை தான் புதுமண்டபம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்குக் கோபுர வாசலுக்கு நேர் எதிரே அமைந்துள்ளது இந்த புதுமண்டபம்.

இந்த வளாகத்திற்குள் குண்டூசி முதல் வெண்கலப் பாத்திரம் வரையிலும், பள்ளிப் பாடப்புத்தகங்கள், போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள், ஆடை, அணிகலன்கள் என கிடைக்காத பொருட்கள் இல்லை என சொல்லும் அளவிற்கு மதுரைக்கு சிறப்பை தேடிதந்த இடமாக புது மண்டபம் விளங்குகிறது. 

கடந்த பிப்ரவரி மாதம் மீனாட்சி அம்மன் கோயில் கிழக்குக் கோபுரப் பகுதியில் அமைந்துள்ள கடைகளில் திடீரென தீப்பற்றி எரிந்ததைத் தொடர்ந்து, கோவிலுக்குள்ளும், புதுமண்டப பகுதிகளிலும் கடைகளுக்குத் தடைவிதிக்கப்பட்டது. மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து கடைகளுக்குத் தடை பெறப்பட்டன.

இங்குள்ள கடைக்காரர்கள் போராடி தற்போது கடைகளைத் திறக்க அனுமதி பெற்றிருந்தாலும், வரும் டிசம்பர் 31-ம் தேதி வரையே கடைகள் வைக்க அனுமதி வைக்க முடியும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அருகிலுள்ள தேவாங்கர் சத்திரத்தில் புதியதாகக் கடைகள் கட்டப்பட்டு, அங்கு அனைத்துக் கடைகளும் கொண்டு செல்லப்படும் என கோவில் நிர்வாகமும் உத்தரவாதம் அளித்துள்ளது. 

புதுமண்டபத்தை நம்பி , நேரடியாக 5000 பேரும் மறைமுகமாக 10,000 பேரும் வேலை வாய்ப்பு பெற்று வந்த நிலையில்,  தற்போது கடைகளை காலி செய்து வேறு இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற உத்தரவால் வியாபாரிகளுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களின் வாழ்வாதரத்தை கருத்தில் கொண்டு விரைவாக மாற்று இடத்தை கட்டி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
source:
http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/2/8/2018/300-year-old-madurai-shopping-mall