வியாழன், 9 ஆகஸ்ட், 2018

மாநிலம் காத்த மாண்பாளன்! August 8, 2018

Image

1971ல் டெல்லியில் கருணாநிதி முன்வைத்த ராஜ மன்னார் குழு அறிக்கை ஒரு மாற்று அரசியல் சட்டத்திற்கான முன் மொழிவாகவே இன்றுவரை இந்திய அரசியலில் பார்க்கப்படுகிறது. 

1969 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் தேதி மத்திய மாநில அரசுகளின் அதிகாரம் குறித்து ஆராய்வதற்காக கருணாநிதியின் முயற்சியால் அமைக்கப்பட்டது தான் ராஜ மன்னார் குழு.


1974 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுக நிறைவேற்றிய மாநில சுயாட்சி தீர்மானம் ஒரு மாற்று அரசியல் பார்வைக்கான தொடக்க தீர்மானமாக இன்றளவும் பார்க்கப்படுகிறது. மாநில அரசின் அதிகாரத்திற்கு மத்திய அரசு தலையிடாமல், சுதந்திரமான சூழல், உருவாக்கப்பட வேண்டும் என இந்திய அரசியலிலேயே குரல் கொடுத்தவர் கருணாநிதி.


1970ல் டெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில், மாநில சுயாட்சி குறித்து கருணாநிதி பேசியது இந்திய அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியது. மாநிலங்களவை தேசிய இனங்களின் அவையாக மாற வேண்டும், எல்லா மாநிலங்களிலிருந்தும் சமமான எண்ணிக்கையில் உறுப்பினர்களைப் பெற வேண்டும் என இந்தியாவிலேயே எந்த தலைவரும் பேசுவதற்கு முன்பாகவே கருணாநிதி பேசினார். 

மாநிலங்களுக்கான உரிமையைப் பறைசாற்றும் வகையில், கர்நாடகாவில் பேசப்படும் மாநிலங்களுக்கான கொடி உரிமையை 47 ஆண்டுகளுக்கு முன்பே முன்னெடுத்து பேசியவர் கருணாநிதி. 1970களில், ஆகஸ்ட் 27 ஆம் தேதி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த கருணாநிதி தமிழக அரசின் கொடி எப்படி இருக்க வேண்டும் என தான் வடிவமைத்த மாதிரியை காட்டியபோது இந்தியாவின் பிற மாநிலங்கள் ஆச்சரிய ரேகைப்படிய அதனைப் பார்த்துக் கொண்டிருந்தன. 

சுதந்திர தினத்தின் போது தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை மாநில முதல்வர்களுக்கு வழங்க வேண்டும் என முதல் முதலில் முழக்கமிட்டு வெற்றியும் கண்டவர் கருணாநிதி. கருணாநிதியின் இந்த கோரிக்கையை அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி ஏற்றதை அடுத்து சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதியில் மாநில முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றும் உரிமை கிடைத்தது. 

இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் நாடு முழுவதும் நெருக்கடிநிலை அமலுக்கு வந்த போது அதை தமிழகத்திற்குள் விட மாட்டேன் என்று கருணாநிதி உறுதியாக நின்றது இந்திய அரசியலில் அவரது முக்கியமான பங்களிப்பாகவே இன்றளவும் பார்க்கப்படுகிறது. இந்தியாவின் எந்த மாநில தலைவர்களும் நெருக்கடி நிலைக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு முன்பாகவே, முதன் முதலாக கருணாநிதியே குரல் கொடுத்து தேசிய அரசியலில் நெருக்கடி நிலைக்கு எதிராக அழுத்தம் கொடுத்தார்.