வியாழன், 9 ஆகஸ்ட், 2018

திமுக தலைவர் கருணாநிதி காலமானார்! August 7, 2018எழுதியவர் : Wasim

Image


திமுகவின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று மாலை 6.10க்கு காலமானதாக காவேரி மருத்துவமனை அறிக்கை. அவருக்கு வயது 95.

வயது முதுமை காரணமாகவும், திடீர் ரத்த அழுத்தக்குறைவு காரணமாகவும், கடந்த ஜூலை 28ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். அதனை அடுத்து, அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. குடியரசுத்தலைவர் முதல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற திரைத்துறையை சேர்ந்தவர்களும் காவேரி மருத்துவமனை சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்து வந்தனர். 

இதனிடையே, கருணாநிதியின் உடல்நிலை குறித்து வதந்திகள் வேகமாக பரவியதை அடுத்து காவேரி மருத்துவமனை முன்பு ஏராளமான திமுக தொண்டர்கள் திரண்டனர். இதனை தொடர்ந்து திமுக சார்பில் கருணாநிதி சிகிச்சை பெறும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டதால் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மேலும், அவரது உடல்நிலை குறித்து 8 மருத்துவ அறிக்கைகளை வெளியிட்டது காவேரி மருத்துவமனை. 

கருணாநிதியின் உடல்நிலை குறித்து தகவல்கள் வெளியான வண்ணம் இருக்க, இன்று மாலை அவரின் உடல்நிலை மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது என 8-வது மருத்துவ அறிக்கையை வெளியிட்டது காவேரி மருத்துவமனை. அதனை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காவலர்கள் எச்சரிக்கையுடன் இருக்க டிஜிபி ஆணையிட்டார். மேலும், காவேரி மருத்துவமனை மற்றும் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் அதிக போலீசார் குவிக்கப்பட்டனர். 

தொடர்ந்து 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி, சிகிச்சை பலனின்றி,உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அரசியல் உலகில் தனி சிறப்பினை பெற்ற கருணாநிதியின் மறைவு நாட்டில் உள்ள பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 5 முறை தமிழகத்தின் முதல்வராகவும் 50 வருடங்கள் திமுகவின் தலைவராகவும் கருணாநிதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினர் மற்றும் தொண்டர்களுக்கு நியூஸ்7தமிழின் ஆழ்ந்த இரங்கல்கள்.