நாடாளுமன்ற கூட்டணி தொடர்பாக தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை டெல்லியில் இன்று சந்தித்து பேசுகிறார்.
தேசிய அளவிலான அணி மாற்ற நிகழ்வில் இந்த சந்திப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் தெலுங்கு தேசம் இடம் பெற்றது. ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் வாக்குறுதியை பாஜக அரசு நிறைவேற்றவில்லை எனக் கூறி சமீபத்தில் பாஜக கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் சமீபத்தில் வெளியேறியது. இதையடுத்து பாஜக குறித்து கடும் விமர்சனங்களை தெரிவித்து வரும் சந்திரபாபு நாயுடு பாஜகவிற்கு எதிரான கட்சிகளை தேசிய அளவில் ஒருங்கிணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை இன்று சந்திக்கும் சந்திரபாபு நாயுடு வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள தெலங்கானா சட்டமன்ற தேர்தலிலும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார் எனக் கூறப்படுகிறது. தேசிய அளவிலான அணி மாற்றங்களில் இது முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது