
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், தென்மேற்கு மற்றும் அதனை சுற்றியுள்ள மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதாக கூறினார். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கும் எனகூறிய அவர், இதர பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை படிப்படியாக தொடங்கும் எனவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று விடிய விடிய மழை பெய்தது. இதன் காரணமாக நுங்கம்பாக்கம், கோயம்பேடு, மதுரவாயல், மயிலாப்பூர், ராயப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர்